கோபமும்.. குழப்பமும்..


கோபமும்.. குழப்பமும்..
x
தினத்தந்தி 11 March 2018 2:42 PM IST (Updated: 11 March 2018 2:42 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய மனைவியின் எண்ண ஓட்டங்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய மனைவியின் எண்ண ஓட்டங்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். சில சமயங்களில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பெண்கள் கோபம் கொள்வார்கள். பதிலுக்கு கோபத்தை வெளிக்காட்டாமல் பொறுமையையும், சகிப்பு தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். கோபம்தான் சண்டை, சச்சரவுகளுக்கு வித்திடும் என்பதால் ஆரம்பத்திலேயே மென்மையான அணுகுமுறையை கையாள வேண்டும். துணையின் கோபத்தின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். தேவையில்லாத விஷயங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

மனைவியுடன் அனுசரித்து செல்ல விரும்புகிறவர்கள், ‘நீ கோபத்தில் கூட அழகாக இருக்கிறாய்?’ என்பது போன்ற வார்த்தைகளை உச்சரிக்கலாம். அது அவர்களுடைய கோபத்தின் வீரியத்தை குறைத்துவிடும். கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் திட்டியிருந்தாலும், ‘நடந்தது எதையும் மனதில் வைத்துக்கொள்ளாதே. மறந்துவிடு’ என்று அமைதிப்படுத்த வேண்டும். ஒருபோதும் சண்டை போடும் எண்ணத்தில் வார்த்தை பிரயோகம் செய்யக்கூடாது.

கோபத்தில் சண்டை எழும்போதெல்லாம் பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வந்து போகும். அது பிரச்சினையை பெரிதுபடுத்துவதற்கு அச்சாரமிடும். அதற்கு இடம் கொடுக்காமல் சில நிமிடங்கள் அமைதி காத்தால் மனம் அமைதியாகிவிடும். ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளை துணை உச்சரித்தாலும் அதனை மனதுக்குள் வைத்துக்கொள்ளாமல் சகிப்பு தன்மையுடன் இருந்துவிட வேண்டும். மனைவி பேசிய வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்தி பார்க்கவும் முயற்சிக்கக்கூடாது.

மனைவி கடும் கோபத்தில் இருந்தால் கணவர் வீட்டை விட்டு வெளியே சென்று வருவது நல்லது. அப்போது செல்போனில் மெசேஜ் அனுப்பி துணையுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். அவர் சிரித்து ரசிக்கும்படியான மெசேஜ்களை அனுப்பி சமாதானம் செய்யலாம். குழந்தைகள் வழியாகவும் சமாதானப்படுத்த முயற்சிக்கலாம்.

Next Story