5 கிலோ நெல் திருட்டு.. 4 பேர் உயிரிழப்பு.. வேதனையான ஒரு வினோத வழக்கு


5 கிலோ நெல் திருட்டு.. 4 பேர் உயிரிழப்பு.. வேதனையான ஒரு வினோத வழக்கு
x
தினத்தந்தி 11 March 2018 3:04 PM IST (Updated: 11 March 2018 3:04 PM IST)
t-max-icont-min-icon

நிரவ் மோடிகள் வங்கிகளில் கோடிகளை லவட்டிக்கொண்டு செல்லும் இந்நாட்டில்தான், வயிற்றுப்பசிக்கு அரிசி திருடிய மது போன்ற இளைஞர்கள் மண்டை பிளக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.

* 2 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்திருக்கிறார்கள்.

* இரு கர்ப்பிணிப் பெண்கள், போலீஸ் தாக்கியதில் உயிரை இழந்திருக்கிறார்கள்.

* 200 பேர் 20 ஆண்டுகளாக கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையாய் நடக்கிறார்கள்.


இதெல்லாம், ஏதோ ஒரு பெரிய குற்றச் சம்பவம் தொடர்பான விஷயங்கள் போலும் என்று உங்களுக்குத் தோன்றலாம்.

உண்மையில், இதெல்லாம் நடந்தது, ஒருவர் சுமார் 5 கிலோ நெல்லைத் திருடியதால்!

நம்ப முடியவில்லையா? அதுதான் உண்மை.

நிரவ் மோடிகள் வங்கிகளில் கோடிகளை லவட்டிக்கொண்டு செல்லும் இந்நாட்டில்தான், வயிற்றுப்பசிக்கு அரிசி திருடிய மது போன்ற இளைஞர்கள் மண்டை பிளக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். (மதுவின் பிரேதப் பரிசோதனையில் அவர் குடலில் ஒரு சோற்றுப் பருக்கை கூட இல்லையாம். வாயில் ஒரு கவளம் சோற்றைக்கூட வைக்கவிடாமல் கொன்றுபோட்டிருக்கிறார்கள் கொடூரர்கள்.)

கேரளாவில் நடந்தது போன்ற வேதனைதான் பீகார் மாநிலம் பாஸாரிலும் நடந்திருக்கிறது.

வீரா முசாகர் என்ற தாழ்த்தப்பட்ட விவசாய கூலித்தொழிலாளி, நிலச்சுவான்தார் அயோத்தியா சிங்கின் களத்தில் இருந்து 5 கிலோ நெல்லைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்காக வீராவை அடித்துத் துவைத்த அயோத்தியாவின் ஆட்கள், அவரை போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. கைதை எதிர்த்து நடந்த போராட்டம், அப்போது வெடித்த கலவரம், அதில் நால்வர் பலி, நூற்றுக்கு மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு என்று ஒரு நீண்ட ரத்த சரித்திரம்.

1998-ல் நடைபெற்ற மேற்கண்ட சம்பவத்துக்காக வீராவின் பாஸார் கிராமத்து மக்கள் இன்றுவரை வேதனையை அனுபவித்து வருகிறார்கள். அயோத்தியா சிங்கின் முற்பட்ட சாதி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களை இன்றும் வெறுப்போடு பார்த்து வருகிறார்கள். கண்ணுக்குத் தெரியாத பகைமை, நீறு பூத்த நெருப்பாக நிலவி வருகிறது.

சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கும் பாஸார் கிராமத்தில் இன்றும் மயான அமைதி நிலவுகிறது. மரத்தடியில் அரட்டை அடித்துக்கொண்டு இருப்பவர்களைக் காண முடியவில்லை, குழந்தைகள் தெருவில் விளையாடவில்லை. இக்கிராமத்தில், தாழ்த்தப்பட்டவர்களே அதிகம் என்றபோதும், அவர்கள் மத்தியில் அசாதாரண பதற்றம் நிலவிக்கொண்டே இருக்கிறது.

வீரா வழக்கில் சுமார் 20 மாத காலம் சிறையில் கழித்துவிட்டு வந்திருப்பவர், 52 வயதாகும் ராம்நாத் முசாகர். வீராவின் கைதை எதிர்த்து நடந்த போராட்டத்தில், இவர் உள்ளிட்டோர், போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றச்சாட்டு. உண்மையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தினேஷ்வர் பஸ்வான், கோடஹான் முசாகர் என்ற இரு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்தான் இறந்திருக்கின்றனர்.

‘‘வேடிக்கையை பாருங்க... வயித்துப்பாட்டுக்கே வழியில்லாம தவிக்கிறவங்க நாங்க. எங்ககிட்ட துப்பாக்கி இருந்ததாம்!’’ - வேதனைச் சிரிப்புடன் சொல்கிறார், ராம்நாத். ஆனால், போலீஸ் தரப்பிலோ, குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட கிராமவாசிகள், ஓர் அரசியல் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் என்றும், அந்தக் கட்சிதான் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியிருக்கிறது என்றும் விளக்குகிறார்கள்.

கிராமத்தினரின் கலவரத்தில், சி.ஆர்.பி.எப்.பை சேர்ந்த டி.எஸ்.பி. சஞ்சய் லத்தேகர் காயம் அடைந்ததாக போலீஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

உண்மையில் உயிரிழப்பைச் சந்தித்தவர்கள் தாங்கள்தான் என தாழ்த்தப்பட்டோர் வட்டாரம் கூறுகிறது.

போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கணவரை இழந்த குல்ஜாரி குவால், தனது கணவர், போராட்டத்தில் கூடக் கலந்துகொள்ளவில்லை என்கிறார்.

போராட்டக்காரர்களை போலீசார் துரத்திக்கொண்டு சென்றபோது, தனது கணவர் மாட்டைக் கட்டிக்கொண்டிருந்தார் என்றும், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, அப்பாவியான அவர் அநியாயமாய் இறந்துவிட்டார் என்றும் கூறுகிறார்.

கர்ப்பிணியான தனது மனைவி பன்வாரியா தேவியை போலீசார் வீட்டில் இருந்து வெளியே இழுத்துப்போட்டு அடித்ததில் அவர் துடிதுடித்து இறந்துவிட்டார் என்கிறார், சுபாகி ராம். இதே கதி, இன்னொரு கர்ப்பவதிக்கும் நடந்ததாக கிராமத்தினர் குற்றஞ் சாட்டுகிறார்கள்.

நிலச்சுவான்தார்கள் தரப்பிலோ அப்படியே பிளேட்டை திருப்பிப் போடுகிறார்கள். நெல்லைத் திருடியதாக வீரா மீது புகார் கூறிய அயோத்தியா சிங்கின் மகன் தப்லு சிங், அவரைத் தாங்கள் பிடித்தவுடனே போலீசில் ஒப்படைத்துவிட்டதாகவும், தாழ்த்தப்பட்டோர்தான் கும்பலாகத் திரண்டு தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்றும் கூறுகிறார்கள்.

‘‘இப்போது இந்த வழக்குக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது போலீசாருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையிலான விஷயம்’’ என்கிறார், தப்லு.

அவரே தொடர்ந்து, ‘‘அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கள் வயல்களில் வேலை செய்ய வருவதில்லை. நாங்கள் வெளியூர்களில் இருந்து கூலியாட்களை வர வழைத்து விவசாயப் பணிகளைக் கவனிப்போம். கதிர்கள் நன்கு முற்றிய நிலையில் தாழ்த்தப்பட்டோர், இரவோடிரவாக எங்கள் வயல்களில் இறங்கி அறுத்துச் சென்று விடுவார்கள். சுமார் பத்தாண்டு காலம் இப்படித்தான் நடந்தது. நாங்கள் பட்டினி கிடந்து சாகும் நிலைக்குப் போய்விட்டோம். ஆனால் இப்போது பரவாயில்லை, ஒரு சிலர் எங்கள் வயல்களில் வந்து வேலை பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்’’ என்று சொல்கிறார்.

‘‘எங்கள் ரத்தம் படிந்த நிலத்தில் நாங்கள் எப்படி வேலை பார்ப்போம்?’’ என்கிறது, தாழ்த்தப்பட்டோர் தரப்பு.

சரி, இவ்வளவுக்கும் மையமாக குற்றவாளியாக போலீஸ் குறிப்பிடும் வீரா என்ன சொல்கிறார்?

தற்போது 65 வயதாகும் அவர், ‘‘களத்துமேட்டுல கல்லும் மண்ணுமா ஒதுக்கப்பட்டுக் கிடந்த நெல்லை அள்ளிக்கிட்டு வந்தது அவ்வளவு பெரிய குத்தமாங்க? அயோத்தியா சிங்கின் ஆட்கள் என்னை சக்கையா அடிச்சுப் பிழிச்சுட்டுதான் போலீசில் ஒப்படைச்சாங்க. நான் ஜெயிலில் இருந்தப்போதான், துப்பாக்கிச் சூடு எல்லாம் நடந்திருக்குது’’ என்கிறார் அப்பாவியாக.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பாதிப் பேர் இந்த இருபதாண்டுகாலத்தில் இறந்துவிட்டார்கள். ஆனால் வழக்கு மட்டும் மெல்ல ‘நடந்து’ கொண்டிருக்கிறது.

Next Story