நிலத்துக்கு போர்வை.. நிலையான மகசூல்..


நிலத்துக்கு போர்வை.. நிலையான மகசூல்..
x
தினத்தந்தி 11 March 2018 3:15 PM IST (Updated: 11 March 2018 3:15 PM IST)
t-max-icont-min-icon

விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தும் ஆர்வம் இளைஞர்களிடம் பெருகிக்கொண்டிருக்கிறது.

விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தும் ஆர்வம் இளைஞர்களிடம் பெருகிக்கொண்டிருக்கிறது. விவசாய குடும்பத்தில் பிறந்து உயர்கல்வி படித்தவர்களும் பெற்றோர் வழிவழியாக பின்தொடரும் விவசாயத்தில் தங்கள் பங்களிப்பையும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் விமானத்துறை சார்ந்த படிப்பு படித்த இளைஞர் ஒருவர் குடும்பத்தினருடன் தன்னையும் இணைத்துக்கொண்டு விவசாயத்தில் புரட்சி செய்து கொண்டிருக்கிறார். அவருடைய பெயர் வசந்த பிரபு. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு மலைப்பகுதியில் உள்ள பால்கடை கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய பெற்றோர் விவசாய தம்பதிகளான பழனிச்சாமி-புஷ்பலட்சுமி.

வசந்தபிரபு ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவர். படித்தது விமானத்துறை தொடர்பானது என்றாலும், அவருடைய ஆர்வம் விவசாயத்தின் மீதுதான் இருந்து வருகிறது. அதிலும் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தி வருகிறார்.

சிறுவயது முதலே ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த வசந்தபிரபு நவீன விவசாயியாக மாறியது எப்படி? என்பது குறித்து நம்முடன் பகிர்ந்தார்.

‘‘எனக்கு சிறுவயது முதலே விமானங்களை பார்க்கும்போது மனதில் அளவில்லா மகிழ்ச்சி ஏற்படும். பள்ளியில் சேர்ந்ததும், விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதுவே பள்ளி படிப்பை முடித்ததும் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்தெடுக்க வைத்தது. சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தேன். விமானம் மீது இருந்த மோகத்தால் ஆர்வமாக படித்து 2013-ம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்தேன். பின்னர் எனது நண்பர்களுடன் சேர்ந்து ஏரோநாட்டிக்கல் பிரிவில் வேலைக்கு சேருவதற்கான அனைத்து அரசு தேர்வு களையும் எழுதினேன். தொடர்ந்து முயற்சி செய்தும் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியான என் நண்பர்கள் தனியார் நிறுவனங்களில் தங்களுக்கு சம்பந்தமில்லாத பிரிவுகளில் கிடைத்த வேலைக்கு சென்றுவிட்டனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை’’ என் கிறார்.

வசந்த பிரபுவின் குடும்பத்தினருக்கு விவசாயத்துடனான பந்தம் தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து கொண்டிருப்பதால் அதில் தன்னையும் ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார். எனினும் விமானத்துறையில் சேருவதற்கான முயற்சியையும் கைவிடவில்லை.

‘‘என்னுடன் சேர்ந்து விமானத்துறை கல்வி பயின்றவர்கள் வேறு வேலைக்கு சென்றுவிட்டதால் நான் சொந்த ஊருக்கு திரும்பி வந்தேன். எனது தாத்தா ராமசாமி, பாட்டி சுப்புலட்சுமியுடன் சேர்ந்து விவசாய பணிகளில் அவர் களுக்கு உதவியாக இருந்தேன். அப்போதும் அரசு தேர்வு எழுதுவதை நான் கைவிடவில்லை. எனது தாத்தா இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்தார். பருவமழை முறையாக பெய்யாதது, காலநிலை மாற்றம் ஆகியவற்றால் விளைச்சல் குறைந்தது. அதை கண்டு அவர் மனம் கலங்கினார். அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக எனது படிப்பை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க முடிவு செய்தேன். ஆனால் எனக்கு விவசாயத்தை பற்றி முழுமையாக தெரியாததால் இணையதளங்களில் நவீன விவசாய தகவல்களை தேடினேன். அப்போது திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் உள்ள தோட்டக் கலைத்துறை அலுவலகத்தில் இந்தியா-இஸ்ரேல் கூட்டு விவசாய மையம் செயல்படுவது தெரியவந்தது. அந்த மையத்துக்கு சென்று அதி காரிகளின் உதவியை நாடினேன். அவர்கள் எங்களது நிலத்தின் தன்மையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பமான மல்சிங் ஷீட்டுகளை (நிலப்போர்வை) பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு பரிந்துரை செய்தனர்’’ என்கிறார்.

இந்த விவசாய தொழில் நுட்பம் வசந்த பிரபுக்கு வேளாண் மீதான ஈடுபாட்டை அதிகரிக்க செய்திருக்கிறது. விளைச்சலையும் இருமடங்காக்கி கொடுத்திருக்கிறது. மல்சிங் ஷீட்டுகளை பயன் படுத்தி விவசாயம் செய்யும் விதம் பற்றி விவரிக்கிறார்.

‘‘முதலில் நிலத்தில் மேட்டுப்பாத்திகளை அமைத்தேன். அதன் பின்னர் சொட்டுநீர் பாசன முறையில் குழாய்களை பதித்தேன். அதைத் தொடர்ந்து மல்சிங் ஷீட்டுகளை நிலத்தில் விரித்து அதன் மேல்பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் மணலை கொட்டினேன். அப்படி செய்ததால் ஷீட்டுகள் நிலப்பரப்புகளை விட்டு நகராமல் நிலத்துக்கு போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்தது. சொட்டுநீர் குழாய்களின் வால்வு உள்ள இடங்களில் செடிகள் நடுவதற்கு ஏற்ற வகையில் சிறிய அளவிலான ஓட்டைகளை போட்டு அவற்றில் உருண்டை மிளகாய் செடிகளை நட்டு வைத்தேன். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால் நிலத்தில் பாய்ச்சிய தண்ணீர் ஆவியாவது தடுக்கப்பட்டது. களைகளும் தோன்றவில்லை. இதனால் களைகளை அகற்றும்போது செடிகளின் வேர்ப்பகுதி சேதமாவதும் தடுக்கப்பட்டது. பராமரிப்பு பணி எளிதானதால் விவசாய செலவுகளும் குறைந்தது. சில மாதங்களிலேயே செடிகள் நன்கு வளர்ந்து பலன் கொடுக்க தொடங்கிவிட்டது. நாங்கள் எதிர்பார்த்ததை விட விளைச்சலும் இருமடங்காகியது. சந்தையில் எங்கள் நிலத்தில் விளைந்த மிளகாய்க்கு கூடுதல் விலையும் கிடைத்தது.

எனது விவசாய முறையை பார்த்த தாத்தாவும், பாட்டியும் தங்களுக்கும் கற்றுக்கொடுக்கும்படி கூறினார்கள். தற்போது இணையதளம் மூலம் அவர்களுக்கும் விவசாய தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுத்து வருகிறேன். எளிமையான பராமரிப்பாக இருப்பதால் முன்பை விட அவர்கள் சுறுசுறுப்பாக விவசாய பணிகளில் தீவிரம் காட்டுகிறார்கள். ‘நீ ஏரோநாட்டிக்கல் என்ஜினீயராக பிரகாசிக்க முடியாவிட்டாலும், ஒரு விவசாயியாக சாதனை படைத்துவிட்டாய்’ என்று என் தாத்தா பெருமிதமாக கூறுகிறார். ஆனாலும் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயராக பணியாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருக்கத்தான் செய்கிறது. அதேவேளையில் விவசாயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றதில் எனது பங்களிப்பும் இருக்கிறது என்பதை நினைக்கும்போது மனம் ஆறுதல் அடைகிறது. இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் தற்போது நிலவும் காலநிலை, தண்ணீர் பற்றாக்குறைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப முறைகளை பின்பற்ற வேண்டும். அப்போது தான் விளைச்சலும் அதிகரிக்கும். விவசாயி களின் வாழ்வும் மேம்படும்’’ என்கிறார்.

Next Story