தடையின்றி குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்


தடையின்றி குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 March 2018 3:30 AM IST (Updated: 12 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே தடையின்றி குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ளது ஒறையூர் கிராமம். இங்கு 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, தினந்தோறும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆழ்துணை கிணற்றின் மின் மோட்டார் திடீரென பழுதானதால் குடிநீர் வினியோகம் தடை பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைத்து, தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் மின்மோட்டார் சீரமைக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பெரும் சிரமங்களுக்கு இடையே தினந்தோறும் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு கால் கடுக்க நடந்து சென்று குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் ஒறையூர் கிராம மக்கள் காலி குடங்களுடன் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த காலி குடங்களை சாலையின் குறுக்கே வைத்து, பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து தடையின்றி குடிநீர் வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது காவலர் தேர்வு எழுதுவதற்காக தனியார் பஸ்சில் வந்தவர்கள், கிராம மக்களிடம் குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும் நாங்கள் வந்த பஸ்சை விடுவிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பழுதடைந்த மின் மோட்டாரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.

Next Story