ராஜீவ்காந்தியை கொன்றவர்களை மன்னித்து விட்டோம்: ராகுல்காந்தியின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது - அற்புதம்மாள் பேட்டி


ராஜீவ்காந்தியை கொன்றவர்களை மன்னித்து விட்டோம்: ராகுல்காந்தியின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது - அற்புதம்மாள் பேட்டி
x
தினத்தந்தி 12 March 2018 4:30 AM IST (Updated: 12 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தியை கொன்றவர்களை மன்னித்துவிட்டோம் என்ற ராகுல்காந்தியின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது என்று அற்புதம்மாள் கூறினார்.

சிதம்பரம்,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் சகோதரி கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்தையா நகரில் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் நேற்று சிதம்பரத்துக்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிங்கப்பூரில் இந்திய நிர்வாக கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு, ராஜீவ்காந்தியை கொன்றவர்களை மன்னித்து விட்டதாகவும், பிரபாகரன் குடும்பம் பாதிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் ராகுல்காந்தி கூறி இருக்கிறார். காலம் கடந்து இந்த கருத்தை ராகுல்காந்தி தெரிவித்து இருக்கிறார். பிரபாகரன் குடும்பம் பாதிக்கப்பட்டபோதே அவர் இந்த கருத்தை தெரிவித்து இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இருப்பினும் அவரது கருத்தை நான் வரவேற்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது மகனின் தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கும் இந்த நேரத்தில் ராகுல்காந்தி கூறியிருப்பதற்கு அனைத்து தலைவர்களும், இந்த கருத்தை வரவேற்று உள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எனது மகன் விடுதலை குறித்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.

எனவே மாநில அரசு விரைந்து, மத்திய அரசுடன் பேசி எனது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story