முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே அடிதடி; 5 பேர் காயம்
குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் இருதரப்பினர் இடையே அடிதடி ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
ஊட்டி,
ஊட்டி லவ்டேல் பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் நேற்று அப்பகுதியை சேர்ந்த செல்வி மற்றும் வேணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே தகராறு ஏற்பட்டு, இருதரப்பினருக்கும் இடையே அடிதடி நிகழ்ந்தது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் விஜய், தீபன், ஆறுமுகம், பிரசாந்த், லதா ஆகிய 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். அங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் முன்பகுதியில் மீண்டும் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லவ்டேலை சேர்ந்த ஜீவா என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், இருதரப்பினர் இடையேயும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து லவ்டேல் போலீசார் இருதரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.