வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் ஊருக்குள் புகுந்த வனவிலங்குகள்


வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் ஊருக்குள் புகுந்த வனவிலங்குகள்
x
தினத்தந்தி 12 March 2018 12:44 AM IST (Updated: 12 March 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் அருகே வனப்பகுதியில் தீ பிடித்தது.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் ஆங்காங்கே தீப்பிடித்து வருகிறது. நேற்று குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் அருகே வனப்பகுதியில் தீ பிடித்தது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று காந்திபுரம் குடியிருப்பு பகுதியில் பரவாமல் தீயை அணைத்தனர். கடந்த ஒரு வாரத்தில் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளான சிங்கார தோப்பு, டேன் டீ குடியிருப்பு அருகேயுள்ள வனப்பகுதி, சென்டோரியம் உள்ளிட்ட 13 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதால் குன்னூர் நகர பகுதிக்கு குரங்குகள் படையெடுத்து உள்ளன. இவைகள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியை திறந்து தண்ணீரை குடித்து வருகின்றன.

இதே போன்று காட்டெருமைகள் சாலைகளில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர். இவை குன்னூர் அருகேயுள்ள நல்லப்பன் தெரு, அண்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் அருகேயுள்ள சேலாஸ், நேரு நகரில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு கரடி புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அதை விரட்டினர். வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதால் தான் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதாகவும் எனவே வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை அமைத்து காட்டுத்தீ பரவாமல் தடுக்க வேண்டும் என்று குன்னூர் நகர மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story