போடி அருகே காட்டுத்தீயில் சிக்கிய திருப்பூர் யோகா ஆசிரியை காயத்துடன் மீட்பு


போடி அருகே காட்டுத்தீயில் சிக்கிய திருப்பூர் யோகா ஆசிரியை காயத்துடன் மீட்பு
x
தினத்தந்தி 12 March 2018 3:00 AM IST (Updated: 12 March 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே காட்டுத்தீயில் சிக்கிய திருப்பூர் யோகா ஆசிரியை காயத்துடன் மீட்பு 2 மகள்களும் காயமின்றி தப்பினார்கள்.

திருப்பூர்,

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். இவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் மலையேற்ற பயிற்சியிலும் ஈடுபடுவார்கள். இந்தநிலையில் ஈரோடு, திருப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் குரங்கணி வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் மலையேற்ற பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதில் திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த யோகா ஆசிரியை சக்திகலா(வயது 35) மற்றும் அவருடைய குழந்தைகளான சாதனா, பாவனா ஆகியோரும் ஈரோடு குழுவினரோடு சேர்ந்து 2 நாட்கள் மலையேற்ற பயிற்சிக்கு சென்றுள்ளனர். மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மதிய உணவு சாப்பிட்ட நேரத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் தப்பிப்பதற்காக நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். அப்போது சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டதாகவும், சிலர் காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் சக்திகலா காயத்துடன் மீட்கப்பட்டார். சாதனா, பவனா ஆகியோர் காயமின்றி மீட்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தங்கமுத்துவின் மகன் ராஜசேகரும்(29) காயமின்றி மீட்கப்பட்டுள்ளார். ஈரோடு, திருப்பூர் பகுதியில் இருந்து 12 பேர் குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.


Next Story