எழும்பூரில் 50 அடி ஆழத்தில் மெட்ரோ ரெயில் நிலையம் தயார்


எழும்பூரில் 50 அடி ஆழத்தில் மெட்ரோ ரெயில் நிலையம் தயார்
x
தினத்தந்தி 12 March 2018 4:30 AM IST (Updated: 12 March 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

எழும்பூர் ரெயில் நிலையத்தின் அருகில் 50 அடி ஆழத்தில் 10 ஆயிரம் சதுர மீட்டரில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்காக 4 வாசல்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

சென்னை,

சென்னை நேரு பூங்காவில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் சென்டிரல் ரெயில் நிலையம் உள்ளது. இந்த 2 ரெயில் நிலையங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அருகில் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ரெயில் நிலையத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. பாதுகாப்பு ஆணையர் இந்த மாதம் சென்னைக்கு வருகை தந்து இந்த பாதையில் ரெயிலில் சென்று சோதனை செய்த பின்னர் சான்றிதழ் வழங்க உள்ளார்.

அதற்கு பிறகு அதாவது வரும் ஏப்ரல் மாதம் இந்த பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் சேவை மற்றும் பயணிகளுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை பணிகளும் நிறைவடைந்து உள்ளன. தற்போது வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு வருகிறது.

எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு பின்புறம் உள்ள 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் 50 அடி ஆழத்தில் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 8 ஆயிரம் சதுர மீட்டர் ரெயில் சேவைக்காகவும், மீதம் உள்ள 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதி பயணிகள் சேவைக்கான இடமாகவும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ரெயில் நிலையத்துக்கு உள்ளே செல்ல பயணிகள் நலன் கருதி பூந்தமல்லி சாலையில் ஒரு வாசலும், 2 வாசல்கள் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருக்கும் உயர்மட்ட நடைபாதை அருகிலும் (டிராக் ஸ்டேஷன் சைடு), ஒரு பாதை எழும்பூர் ரெயில் நிலையத்தின் பின்புறம் உள்ள பஸ் ஸ்டாண்டு அருகிலும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 4 வாசல்கள் அமைக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைந்து உள்ளன.

இந்த ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்காக 2 லிப்டுகளும், 3 நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

டிக்கெட் கவுண்ட்டர்கள், பயணிகள் அமரும் பகுதி போன்றவை நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. பயணிகள் பாதுகாப்பு கருதி தண்டவாளத்தையும் பிளாட்பாரம் இருக்கும் பகுதியையும் மறைக்கும் வகையில் ஸ்டீல் கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. ரெயில் வந்து நின்ற உடன் ரெயிலில் உள்ள கதவும், பிளாட்பாரத்தில் உள்ள கதவுகளும் ஒரேநேரத்தில் திறக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. தரைதளத்தில் உள்ள 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவின் ஒரு பகுதியில் வாகன நிறுத்தும் இடம் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரெயில் நிலையம் ஏப்ரல் மாதம் பயன்பாட்டுக்கு வரும் போது தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் மற்றும் எழும்பூரைச் சுற்றி உள்ள வேப்பேரி, புரசைவாக்கம், பெரியமேடு, புதுப்பேட்டை, சிந்தாதிரிபேட்டை போன்ற பகுதிகளின் பயணிகளும் விமானநிலையம் மற்றும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நேரு பூங்கா- சென்டிரல் வரையிலான சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து உள்ளன. தற்போது இரவு நேரத்தில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ரெயில் பாதைகள், சிக்னல்கள் போன்றவற்றை ஆய்வு செய்ய பாதுகாப்பு ஆணையர் இம்மாத இறுதிக்குள் வர வாய்ப்பு உள்ளது. அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் பயணிகள் சேவை தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதன் மூலம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு பயணிகள் மெட்ரோ ரெயிலில் நேரடியாக பயணம் செய்யலாம். இந்த வழித்தடத்தில் எழும்பூர்- சென்டிரல் முக்கிய ரெயில் நிலையங்கள் உள்ளதால் அதிகமான பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story