கரூரில் 86 ஆயிரத்து 830 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


கரூரில் 86 ஆயிரத்து 830 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
x
தினத்தந்தி 12 March 2018 4:00 AM IST (Updated: 12 March 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் 86 ஆயிரத்து 830 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

கரூர்,

போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. கரூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்க நிகழ்ச்சி கரூர் நகராட்சி தாய் சேய் நல மையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்திட்டு தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் 963 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடந்தது. இம்முகாமில் பல்வேறு அரசுத்துறை மற்றும் தன்னார்வ அமைப்புக்களை சேர்ந்த பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்கள் என 3 ஆயிரத்து 794 பேர் பணியில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனைகள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் உள்ளிட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மணவாசி மற்றும் வேலஞ்செட்டியூர், சுங்கச்சாவடிகளிலும் சிறப்பு சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு பஸ் மற்றும் வாகனங்களில் பயணிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இதற்கு முன்பு எத்தனை முறை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 86 ஆயிரத்து 830 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக தொடக்க நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் நளினி, நகராட்சி ஆணையர் அசோக்குமார், உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, நகர்நல அலுவலர் ஆனந்தகண்ணன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் காளியப்பன், நெடுஞ்செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story