ரூ.10 ஆயிரம் கடனுக்காக ‘3 சென்ட் நிலத்தை கேட்டு அ.தி.மு.க. பிரமுகர் மிரட்டுகிறார்’ மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண், கலெக்டரிடம் புகார்


ரூ.10 ஆயிரம் கடனுக்காக ‘3 சென்ட் நிலத்தை கேட்டு அ.தி.மு.க. பிரமுகர் மிரட்டுகிறார்’ மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண், கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 13 March 2018 4:30 AM IST (Updated: 13 March 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

ரூ.10 ஆயிரம் கடனுக்காக 3¼ சென்ட் நிலத்தை கேட்டு அ.தி.மு.க. பிரமுகர் மிரட்டுகிறார் என்று மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண், கலெக்டரிடம் பரபரப்பாக புகார் தெரிவித்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தண்டபாணி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக பெண் ஒருவர், தனது மகன், மகளுடன் அழுதபடி கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார், அந்த பெண்ணை மறித்து கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 5 லிட்டர் கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் கேனில் 3 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது. உடனே அதனை போலீசார் பறிமுதல் செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

திட்டக்குடி அருகே உள்ள மங்களூர் வாணியர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி செல்வம்(வயது 28). குடிப்பழக்கத்துக்கு அடிமையான எனது கணவர் சுப்பிரமணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பின்னர் நான் கூலி வேலைக்கு சென்று எனது பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறேன். எனது கணவர் இறப்பதற்கு முன்பு மங்களூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அவர் இறந்ததை கேள்விப்பட்டு வந்த அ.தி.மு.க. பிரமுகர், எனது கணவர் வாங்கிய பணத்தை உடனே தர வேண்டும். இல்லை என்றால் வெற்றுத்தாளில் கையெழுத்து போட்டு தந்தால்தான் உடலை அடக்கம் செய்ய அனுமதிப்பேன் என்று பிடிவாதம் செய்தார்.

அப்போது என்னிடம் பணம் இல்லாததால், வேறு வழியின்றி வெற்றுத்தாளில் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன். அதன் பின்னர், அவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து என்னிடம் பணத்தை வாங்கி சென்றார். எனது கணவர் எவ்வளவு பணம் கடன் வாங்கி இருந்தார், எவ்வளவு தர வேண்டும் என்று கேட்டால் அவர் பதில் சொல்ல மறுக்கிறார். தொடர்ந்து அவர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டி வருவதோடு வீடு கட்டுவதற்காக எனது தந்தை எனக்கு கொடுத்த 3¼ சென்ட் நிலத்தையும் எழுதி தர வேண்டும் என்றும், இல்லையெனில் பிள்ளையார் கோவிலில் கட்டி வைத்து அடிப்பேன் என மிரட்டினார். இதனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனக்கு இருக்கிற ஒரே சொத்தையும் அவரிடம் கொடுத்து விட்டால், எனது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எனவே வேறு வழியின்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக குழந்தைகளை அழைத்துக்கொண்டு மண்எண்ணெய் கேனுடன் வந்தேன்.

இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.

இதையடுத்து அவரை போலீசார், கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர். செல்வம், தான் ஏற்கனவே எழுதி வந்திருந்த பரபரப்பு புகாரை கலெக்டரிடம் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், காவல்துறை மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து செல்வம் தனது குழந்தைகளுடன் சென்று விட்டார். 

Next Story