முகில்தகம் ஊராட்சி அலுவலகம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு, கிராம மக்கள் முற்றுகை


முகில்தகம் ஊராட்சி அலுவலகம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு, கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 March 2018 3:15 AM IST (Updated: 13 March 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை யூனியன் முகில்தகம் ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

தொண்டி,

திருவாடானை யூனியன் முகில்தகம் ஊராட்சியை சேர்ந்த சின்ன, பெரிய முகில்தகம், வெள்ளாள கோட்டை, ஏசுபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அதனைதொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சேகரிடம் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:- முகில்தகம் ஊராட்சி தொடங்கிய காலம் முதல் ஊராட்சி அலுவலகம் முகில்தகம் கிராமத்தில் தான் செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போது ஊராட்சி அலுவலக கட்டிடம் சீரமைக்கப்பட்டு உள்ளது. இதன் அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. முகில்தகம் சுற்று வட்டார பகுதிகளுக்கு மைய பகுதியாகவும், அனைவரும் வந்து செல்ல உகந்த இடமாகவும் இருந்து வந்தது.

இந்த நிலையில் முகில்தகம் ஊராட்சி அலுவலகம் சோளியக்குடி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி பொது சேவை மைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுஉள்ளது. இதனால் முகில்தகம் ஊராட்சியை சேர்ந்த சின்ன, பெரிய முகில்தகம், வெள்ளாளகோட்டை, ஏசுபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஊராட்சி சம்பந்தமான பணிகளுக்கு பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுஉள்ளது.

இந்த அலுவலகம் மற்றப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் பயன் அளிக்காது. எனவே மீண்டும் ஊராட்சி அலுவலகத்தை முகில்தகம் கிராமத்தில் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

Next Story