கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடர்ந்து காலதாமதம், பொதுமக்கள் அதிருப்தி


கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடர்ந்து காலதாமதம், பொதுமக்கள் அதிருப்தி
x
தினத்தந்தி 13 March 2018 3:30 AM IST (Updated: 13 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை பணிக்காக ரெயில்வே துறையால் தேதி குறிப்பிடப்பட்ட நிலையில் அந்த பணியை தொடங்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தையொட்டி ரெயில்வே கேட் உள்ளது. இந்த வழியாகத்தான் கும்மிடிப்பூண்டி சிப்காட், பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி.நகர், புதுகும்மிடிப்பூண்டி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

ரெயில்வே நிர்வாகத்துக்கு ஏற்படும் நடைமுறை சிக்கலை கருத்தில்கொண்டு இந்த ரெயில்வே கேட் பல வருடங்களுக்கு முன்பே நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது. இருப்பினும் மூடப்பட்ட ரெயில்வே கேட்டை ஆபத்தான முறையில் கடந்துதான் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் மறுபுறம் சென்று வருகின்றனர்.

சில நேரங்களில் சவ ஊர்வலங்களையும் ரெயில்வே கேட்டில் குனிந்து எடுத்து செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து இந்த பகுதியில் ரூ.2 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.

சுரங்கப்பாதை அமைப்பதற்காக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. ரெயில்வே கேட்டின் அருகே ரெடிமேட் சுரங்கப்பாதை அமைத்திட தேவையான சிமெண்டு பாலம் தயாரிக்கப்பட்டன. ஆனால் நிர்வாக பிரச்சினை காரணமாக சுரங்கப்பாதை தொடர்பான அடுத்த கட்ட பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை பணியை முடித்திட கடந்த 3, 4, 10 மற்றும் 11-ந் தேதிகளில் சில குறிப்பிட்ட ரெயில்கள் நிறுத்தப்பட்டு, சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக ரெயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக அந்த பகுதியில் ஆக்கிரமித்து கட்டி இருந்த தனியார் கட்டிடங்களையும் ரெயில்வே துறையினர் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றினர். ஆனால் ரெயில்வே துறையினர் சுரங்கப்பாதை அமைப்பதாக சொன்ன குறிப்பிட்ட தேதிகளை கடந்தும் தற்போது வரை ரெயில்வே கேட்டின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை.

சுரங்கப்பாதை பணியை தொடங்கிட ரெயில்வே துறை சார்பில் தேதி குறிப்பிட்ட பிறகும் மீண்டும் பணியை தொடங்காமல் காலதாமதம் செய்து வருவதை கண்டு கும்மிடிப்பூண்டி பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இனியும் காலதாமதம் ஏற்படாமல் சுரங்கப்பாதை பணியை விரைவில் முடித்திடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story