பட்டாபிராமில் தீயில் கருகி மாணவன் பலி


பட்டாபிராமில் தீயில் கருகி மாணவன் பலி
x
தினத்தந்தி 13 March 2018 4:00 AM IST (Updated: 13 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

பட்டாபிராமில் தீயில் கருகி மாணவன் பலியானார்.

ஆவடி,

ஆவடி அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. கூலித்தொழிலாளி. இவருக்கு கம்னீஷ் (9), பாலமுருகன் (7) என 2 மகன்கள் இருந்தனர். இதில் கம்னீஷ் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பும், பாலமுருகன் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை கம்னீஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.

அப்போது அவன் வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தபோது மண்எண்ணெய் கீழே கொட்டியது. உடனே துணியை எடுத்து மண்எண்ணெயை துடைத்தான். பின்னர் கம்னீஷ் விளையாட்டாக தீக்குச்சியை எடுத்து கொளுத்தியதாக தெரிகிறது. அப்போது கம்னீஷ் உடலில் தீப்பிடித்து எரிந்தது. உடனே அலறி துடித்தான்.

அலறல் சத்தம் கேட்டு வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த வடிவேலு மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, தீயில் கருகி கம்னீஷ் இறந்து கிடந்தான். தகவல் அறிந்த பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story