ஆலூர் அருகே தண்ணீர் தேடி வந்தபோது குளத்தின் சேற்றில் சிக்கி 10 மணி நேரம் போராடிய குட்டி யானை


ஆலூர் அருகே தண்ணீர் தேடி வந்தபோது குளத்தின் சேற்றில் சிக்கி 10 மணி நேரம் போராடிய குட்டி யானை
x
தினத்தந்தி 13 March 2018 4:30 AM IST (Updated: 13 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

குளத்தின் சேற்றில் சிக்கி 10 மணி நேரம் போராடிய குட்டி யானையை வனத்துறையினர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மீட்டனர்.

சிக்கமகளூரு,

கர்நாடகத்தில் தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மழை எதுவும் பெய்யாததால், கோடைகாலம் தொடங்கும் முன்பே வறட்சி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா மாதிஹள்ளி கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. அந்த வனப்பகுதியில் உள்ள ஏரிகள், குட்டைகள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி குட்டி யானை ஒன்று மாதிஹள்ளி கிராமத்துக்குள் நுழைந்தது. அந்த குட்டி யானை கிராமத்தையொட்டி உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக இறங்கியது.

சேற்றில் சிக்கியது

ஆனால், அந்த குளத்தில் தண்ணீர் எதுவும் இல்லாமல் சேறு மட்டும் தான் கிடந்தது. இதனை அறியாத அந்த குட்டி யானை குளத்தில் கிடந்த சேற்றில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த குட்டி யானையால் வெளியே வர முடியவில்லை. இதன்காரணமாக அந்த குட்டி யானை பிளிறியது. இந்த நிலையில் நேற்று காலை, யானை பிளிறும் சத்தம் கேட்டு அந்தப்பகுதி மக்கள் குளத்தின் அருகே சென்று பார்த்தனர்.

அப்போது, குளத்தின் சேற்றில் குட்டி யானை ஒன்று சிக்கிக் கொண்டிருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், இதுதொடர்பாக ஆலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து வனத்துறையினர், அந்தப்பகுதி மக்கள் உதவியுடன் குட்டி யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மீட்கப்பட்டது

அதாவது, கயிறு மூலம் குட்டி யானையை மீட்க வனத்துறையினர் முயன்றனர். ஆனால், அந்த முயற்சி வனத்துறையினருக்கு கை கொடுக்கவில்லை. இதையடுத்து சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அந்த எந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு நேற்று மாலை அந்த குட்டி யானை, சேற்றில் இருந்து மீட்கப்பட்டது.

சேற்றில் இருந்து வெளியே வந்த அந்த குட்டி யானை, வனப்பகுதியை நோக்கி ஓடியது. அந்த குட்டி யானை மீட்கப்பட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

10 மணி நேர போராட்டம்

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால், அந்த குட்டி யானை தண்ணீர் தேடி கிராமத்துக்குள் வந்தது. அப்போது குளத்துக்குள் தண்ணீர் இல்லாததை அறியாத குட்டி யானை, குளத்தின் சேற்றில் சிக்கிக் கொண்டது. வனத்துறையினர் அந்தப்பகுதி மக்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரத்தின் மூலம் சுமார் 10 மணி நேரம் போராடி அந்த குட்டி யானையை மீட்டனர். அந்த குட்டி யானை சோர்வாக இருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், சேற்றில் இருந்து வெளியே வந்ததும், அந்த குட்டி யானை துள்ளி குதித்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது என்றார். 

Next Story