அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை


அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 March 2018 4:45 AM IST (Updated: 13 March 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் பொதுத் துறை செயலாளர் கோர்ட்டில் ஆஜராக நேரிடும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

மதுரை,

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக அமைச்சராக உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னுடைய வருமானம் வரி வரம்பிற்குள் இல்லை எனவும், ரூ.18.88 லட்சத்திற்கு அசையும் சொத்தும், ரூ.19.11 லட்சத்திற்கு அசையா சொத்தும் உள்ளதாகவும் கூறியிருந்தார்.

அமைச்சரான பின்னர் பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியுள்ளார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கோர்ட்டு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் ஆஜராக கோர்ட்டில் உத்தரவிடப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர் இந்த வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story