தொழிற்சாலையில் புகுந்து மோட்டார்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது


தொழிற்சாலையில் புகுந்து மோட்டார்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 13 March 2018 3:45 AM IST (Updated: 13 March 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலையில் புகுந்து மின்சார மோட்டார்களை திருடியதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மின்சார மோட்டார்கள் மீட்கப்பட்டன.

பாகூர்,

கிருமாம்பாக்கத்தை அடுத்த கன்னியக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 40). இவர் பரிக்கல்பட்டு-முள்ளோடை ரோட்டில் சிமெண்டு கல் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு யாரோ மர்ம மனிதர்கள் தொழிற் சாலையில் புகுந்து அங்கிருந்த 4 மின்சார மோட்டார்கள் மற்றும் சாக்கு தைக்கும் சிறிய எந்திரம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இதுகுறித்து இளங்கோ கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மாலை கன்னியக்கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பழைய இரும்புக்கடையில் 2 வாலிபர்கள் ஒரு மொபட்டில் சாக்குமூட்டையுடன் நின்று கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த சாக்குமூட்டையை வாங்கி பார்த்ததில் 4 மின்சார மோட்டார்கள் இருந்தன.

அதைத் தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் கடலூர் செம்மண்டலம் மாரியம்மன்கோவில் தெருவைச் தினேஷ்பாபு (26) மற்றும் திருப்பாப்புலியூர் கம்மியம்பேட்டையைச் சேர்ந்த சக்திவேலு (27) என்பதும், அவர்கள் இருவரும் இளங்கோவுக்கு சொந்தமான தொழிற்சாலையில் 4 மின்சார மோட்டார்கள், சாக்கு தைக்கும் எந்திரத்தை திருடியது தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த மொபட்டும் திருடிக்கொண்டு வரப்பட்டது என்பதும் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து வாலிபர்கள் தினேஷ்பாபு மற்றும் சக்திவேலுவை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மின்சார மோட்டார்கள், சாக்கு தைக்கும் எந்திரம், மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story