மும்பையில், கோரிக்கைகளை உடனடியாக அரசு ஏற்றதால் விவசாயிகள் போராட்டம் வாபஸ்
மும்பையில் 35 ஆயிரம் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றது.
மும்பை,
மராட்டியத்தில் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மாநில அரசு வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பு விவசாய அமைப்பான அகில இந்திய கிஷான் சபா வலியுறுத்தி உள்ளது.
இத்துடன் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாசிக்கில் இருந்து மும்பைக்கு விவசாயிகளை திரட்டி 180 கி.மீ. தூர நடைபயணத்தை தொடங்கியது.
மும்பையில் நடந்து வரும் மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு கடந்த 6-ந்தேதி தொடங்கிய இந்த நீண்டதூர நடைபயண பேரணியில்் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். அவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் சிவப்பு நிற தொப்பியை அணிந்து, செங்கொடியை கையில் பிடித்தபடி மும்பையை நோக்கி பயணித்தனர்.
விவசாயிகளின் இந்த பிரமாண்ட பேரணி நாட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்த பிரமாண்ட பேரணியில் சிறுவர்களும், பெண்களும், வயதானவர்களும் கூட அதிகளவில் கலந்துகொண்டனர்.
தானே மாவட்டம் வழியாக வந்தபோது, அந்த மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினரும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.
இதேபோல பல்வேறு விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து பேரணியில் பங்கேற்றனர். இதனால் பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமானது. இந்த பேரணியில் மொத்தம் 35 ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டதாக அகில இந்திய கிஷான் சபா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், 6 பகலாக கால் கடுக்க நடந்த விவசாயிகள் நேற்று முன்தினம் மாலை தலைநகர் மும்பையில் அடியெடுத்து வைத்தனர். நாசிக்கில் பேரணியை தொடங்கிய அதே உத்வேகத்தில் சற்றும் சலிப்பின்றி அவர்கள் மும்பை நகருக்குள் நுழைந்தனர். முல்லுண்டில் விவசாயிகளை சந்தித்த மாநில மந்திரி கிரீஷ் மகாஜன், அவர்களது பேரணியை வரவேற்றதுடன் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்றும் உறுதி அளித்தார்.
மும்பைக்கு வந்த விவசாயிகள் பேரணிக்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், நவநிர்மாண் சேனா மட்டுமின்றி மாநில ஆட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியான சிவசேனாவும் ஆதரவு தெரிவித்தது.
நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே, சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் விவசாயிகளை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்தநிலையில், சயான் சுன்னாப்பட்டியில் இரவு தங்கி விவசாயிகள் ஓய்வு எடுத்தனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தங்களது பேரணியால் மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என கருதிய விவசாயிகள் நேற்று நள்ளிரவு 1 மணிக்கே அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.
அதிகாலை 5 மணியளவில் ஆசாத் மைதானத்தை சென்றடைந்தனர். மைதானம் முழுவதும் விவசாயிகள் திரண்டு இருந்தனர். காலை அங்கிருந்து திரளாக சென்று சட்டசபையை முற்றுகையிட திட்டமிட்டு இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது
இதன் காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு, சட்டசபையை சுற்றிலும் பாதுகாப்புக்காக போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். விவசாயிகள் சட்டசபையை நோக்கி வந்து விடாமல் தடுத்து நிறுத்துவதற்காக ஆசாத் மைதானத்திலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இருப்பினும் விவசாயிகள் ஆசாத் மைதானத்தில் மிகவும் அமைதி காத்து அமர்ந்து இருந்தனர்.
மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, அகில இந்திய கிஷான் சபா தலைவர் அம்ரா ராம் உள்ளிட்டோர் விவசாயிகள் மத்தியில் பேசினார்கள்.
இதற்கிடையே அகில இந்திய கிஷான் அமைப்பின் உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ.வுமான ஜிவா பாண்டு காவித் மராட்டிய அரசு எங்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை மும்பையை விட்டு நகரமாட்டோம் என்று கூறினார்.
இந்தநிலையில், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.
இந்த குழுவில் மாநில வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், நீர்பாசனத்துறை மந்திரி கிரீஷ் மகாஜன், பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே, வேளாண் துறை மந்திரி பாண்டுரங் புண்ட்கர், பழங்குடியின நலத்துறை மந்திரி விஷ்ணு சவாரா, மந்திரி சுபாஷ் தேஷ்முக் ஆகியோர் இடம் பெற்றனர்.
இதையடுத்து மந்திரிகள் குழுவை அகில இந்திய கிஷான் சபா அமைப்பின் விவசாய பிரதிநிதிகள் சந்தித்து பேசி வருகிறார்கள்.
இதற்கிடையே மந்திரிகள் குழுவை, போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய அகில இந்திய கிஷான் சபா அமைப்பின் பிரதிநிதிகள் 12 பேர் நேற்று இரவு சந்தித்தனர். அவர்கள் அரசிடம் நிறைவேற்றக்கோரி தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதில், மாநில அரசு குழு விவாதித்து அந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டது. இதன் மூலம் விவசாயிகளின் 180 கி.மீ. தூர நடை பயணத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிட்டியது. இதையடுத்து உடனடியாக அகில இந்திய கிஷான் சபா அமைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து ஆசாத் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி முன்னிலையில் விவசாயிகள் மத்தியில் பேசிய வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், ‘உங்களது அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு இருக்கிறது' என்றார்.
இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.
இந்தநிலையில், சட்டசபையில் நிருபர்களை சந்தித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், 2005-ம் ஆண்டுக்கு முன் இருந்து வனத்துறையினருக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வரும் பழங்குடியினர் மற்றும் விவசாயிகளுக்கு அந்த இடங்களை அவர்களிடமே ஒப்படைக்க கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டது.
மேலும் விவசாயிகளின் மற்ற அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது’ என்றார்.
இந்தநிலையில், விவசாயிகள் அனைவரும் அவர்களது சொந்த ஊர் திரும்புவதற்காக 2 சிறப்பு ரெயில்கள் மத்திய ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டன. இரவில் புறப்பட்ட அந்த ரெயில்களில் விவசாயிகள் ஏறிச்சென்றனர். பலர் பஸ்களிலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story