விபத்தை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கக்கோரி விக்கிரவாண்டியில் கடைகள் அடைப்பு-உண்ணாவிரதம்


விபத்தை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கக்கோரி விக்கிரவாண்டியில் கடைகள் அடைப்பு-உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 14 March 2018 3:45 AM IST (Updated: 13 March 2018 11:42 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கக்கோரி வியாபாரிகள், தங்களது கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டார்

விக்கிரவாண்டி, 

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலையில் அண்ணா சிலை அருகில் தொடர்ந்து சாலை விபத்துகள் அதிகமாக நடந்து வருகிறது. சில சமயங்களில் உயிரிழப்புகளும் நடந்து வருவதால் இப்பகுதியில் விபத்தை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது விக்கிரவாண்டி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இதுசம்பந்தமாக விக்கிரவாண்டி பகுதி மக்கள், வியாபாரிகள் பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரையிலும் மேம்பாலம் கட்டுவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலை பகுதியில் தொடர் விபத்தை தடுக்கும் வகையில் உடனடியாக மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி விக்கிரவாண்டியில் நேற்று முழு கடையடைப்பு நடந்தது.

இதையொட்டி வியாபாரிகள் அனைவரும் தங்களது கடைகளை அடைத்திருந்தனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விக்கிரவாண்டி மெயின்ரோடு, மைல்கல் தெரு, பஸ் நிலைய பகுதிகள், பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுமே ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வடக்கு புறவழிச்சாலை அண்ணாசிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஏரி நீர் பாசன சங்க தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பாபுஜீவானந்தம், ஜனார்த்தனன், காஜா மொய்தீன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தொடங்கி வைத்தார்.  ஒரு கிராமத்தில் சாலைகள் அமைக்கும்போது மக்களுக்கு பிரச்சினை ஏற்படாதவாறும், விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் வகையிலும் ஆய்வு செய்து சாலையில் மேம்பாலமோ, சுரங்கப்பாதையோ அமைத்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் இப்பகுதியில் சாலை விபத்தால் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தெரிகிறது.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை, தொடர் சாலை மறியல் போராட்டம் என அரசுக்கு நெருக்கடி கொடுத்தால்தான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். வருகிற மே மாதம் 5-ந் தேதி காஞ்சீபுரத்தில் வணிகர்கள் சங்க மாநாடு நடக்கிறது. இதில் தமிழகத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கும் இடத்திற்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவும், விக்கிரவாண்டியில் மேம்பாலம் அமைப்பதன் அவசியம் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story