சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்


சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 14 March 2018 3:30 AM IST (Updated: 14 March 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா சாலை பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சென்னை,

சென்னையின் இதயப்பகுதியான அண்ணா சாலை பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து அண்ணா சாலையின் ஒரு பகுதியில் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து உள்ளன. குறிப்பாக சின்னமலையில் இருந்து சைதாப்பேட்டைக்கு சுரங்கப்பாதையில் ரெயில் செல்லும் அளவிற்கு பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை (ஏ.ஜி-டி.எம்.எஸ்.) வரை 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையில் ரெயில் போக்குவரத்துக்கான பாதை அமைக்கும் பணி நிறைவடைந்து உள்ளன. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. இதனை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால், பொதுமேலாளர் வி.கே.சிங் (சுரங்கம்) உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் சோதனை ஓட்டம் நடந்தது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது.

சென்னை சின்னமலை - தேனாம்பேட்டை (ஏ.ஜி-டி.எம்.எஸ்) இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி முற்றிலும் நிறைவடைந்து உள்ளது. இந்த பாதையில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, ஏ.ஜி-டி.எம்.எஸ் ஆகிய 4 ரெயில் நிலையங்கள் சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்டு உள்ளன.

தற்போது இந்த பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து ரெயில் போக்குவரத்தை தொடங்க தயார் நிலையில் இருக்கிறோம். விரைவில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியபின் மெட்ரோ ரெயில் இயக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story