அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மீனவர்கள் கோரிக்கை


அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 March 2018 4:30 AM IST (Updated: 14 March 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம், 1978-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. பழவேற்காடு முதல் கடப்பாக்கம் வரையுள்ள திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள 140 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்த மீன்பிடி துறைமுகத்தில் இருந்துதான் மீன்பிடிக்க கடலுக்குள் செல்கின்றனர்.

2 ஆயிரம் பைபர் படகுகளில் செல்பவர்கள் தூண்டில், கில்நட், கவளை வலை, பண்ணுவலை மூலம் மீன்களை பிடித்து வருகின்றனர். 1,200 விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி கடலுக்குள் சென்று இழுவை வலை மூலம் மீன் பிடித்து வருகின்றனர்.

இவ்வாறு நண்டு, இறால், வஞ்சிரம், வவ்வால், பாறை, திருக்கை, நவரை, பண்ணா உள்பட 100-க்கும் மேற்பட்ட வகையான மீன்களை பிடித்து வருகின்றனர். இதை தவிர்த்து மீன்விற்பனை செய்பவர்கள், மீன்களை பதப்படுத்துபவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த வேலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 டன் மீன்கள் பிடிக்கப்பட்டு, ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்று வருகின்றது. தினமும் 20 ஆயிரம் பேருக்கு மேல் வந்து செல்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எண்ணூர் துறைமுகம் அருகே டான் காஞ்சீபுரம் மற்றும் எம்.டபிள்யூ.மாப்பிள் என்ற கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கொட்டியதால் பல்லுயிர் பெருக்கம் இல்லாமல் போனது. இதனால் மீன்கள் இடம் பெயர்ந்து சென்றுவிட்டது.

எனவே கடலில் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் போதுமான அளவு மீன் கிடைக்காததால் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துவிட்டு மாற்றுத்தொழில் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஆந்திரா மற்றும் கடலூரில் இருந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடல் தொழில் செய்து வந்த மீனவர்கள் வெளியேறி சென்றுவிட்டனர்.

மீன்பிடி தொழில் ஒருபுறம் நலிவுற்ற நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அரசு சார்பில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இங்கு தொழில் செய்யும் மீனவர்களுக்கு குடிநீர் வசதி செய்துதரவில்லை. துறைமுகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை துறைமுக கரையோரம் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள் தூர்வாரப்படவில்லை. பல இடங்களில் சாக்கடைநீர் தேங்கி நிற்பதுடன், அதில் மீன்கழிவுகள் கொட்டி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளும் பணியை மாநகராட்சியிடம் ஒப்படைத்து தினமும் குப்பைகளை அள்ள வேண்டும். தெரு விளக்குகள் அமைத்து கொடுத்து திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் இருந்து மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நவீன படகுகளை ஏற்றி, இறக்கும் தளம் ஒன்றும் கட்டி கொடுக்க வேண்டும். மிகப்பெரிய சோலார் வசதியுடன் கருவாடு உலர வைக்கும் ஆலை நிறுவ வேண்டும். மீன்களை சில்லரையாக விற்பனை செய்ய மற்றும் மொத்தமாக விற்பனை செய்வதற்கு என தனித்தனி இடம் ஒதுக்க வேண்டும்.

மீன்களை வெட்டுவதற்கு என தனி இடம் கட்டி கொடுக்க வேண்டும். மொத்தமாக மீன்கள் இருப்பு வைக்க கூடிய அளவில் நவீன வசதிகளுடன் கூடிய குடோன் அமைத்து தரவேண்டும். அரசாங்கம் மீன்களை கொள்முதல் செய்யும் நிலையத்தை கொண்டு வரவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினம், தினம் செத்து பிழைக்கும் மீனவர்கள் வாழ்க்கை தரம் உயர காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மீனவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Next Story