காட்டுத்தீயில் 11 பேர் பலி: போடி வன ஊழியர் பணி இடைநீக்கம்
குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 11 பேர் பலியானதை தொடர்ந்து போடி வன ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தேனி,
தேனி மாவட்டம், போடி குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11-ந்தேதி ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 11 பேர் உடல் கருகி பலியானார்கள். காயத்துடன் மீட்கப்பட்ட 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிர் தப்பியவர்களில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த பிரபு (வயது 30) என்பவரும் ஒருவர். இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் க.விலக்கு போலீசாரிடம் குரங்கணி மலையில் நடந்த சம்பவம் பற்றி வாக்குமூலம் அளித்தார். அதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கடந்த 9-ந்தேதி இரவு 9.30 மணிக்கு சென்னிமலையில் இருந்து வேனில் குரங்கணி பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கும், சுற்றிப்பார்க்கவும், நானும், எனக்கு பழக்கமான 11 பேர் என மொத்தம் 12 பேர் தேனி வழியாக போடிக்கு வந்தோம். போடியில் 10-ந்தேதி காலையில் உணவு சாப்பிட்டுவிட்டு குரங்கணிக்கு சென்றோம்.
வழியில் முந்தலில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் ஒருவருக்கு ரூ.200 வீதம் கட்டணம் செலுத்தி காட்டுக்குள் செல்ல அனுமதி சீட்டு பெற்றோம். அங்கிருந்த குரங்கணி பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற வழிகாட்டியுடன் காலை 9 மணிக்கு குரங்கணி சென்றோம். அங்கு வேனை நிறுத்திவிட்டு மலையேற்றம் தொடங்கி, கொழுக்குமலைக்கு மாலை 6 மணிக்கு சென்றோம். அன்று இரவு அங்கு கூடாரம் அமைத்து தங்கினோம்.
எங்களுக்கு பின்னால் சென்னையை சேர்ந்த அருண் என்பவருடன் 26 பேர் வந்தனர். அவர்களும் எங்களுக்கு அருகில் தங்கினர்.
11-ந்தேதி காலை கொழுக்குமலை தேயிலை எஸ்டேட் பகுதியை சுற்றிப்பார்த்தோம். அருணுடன் வந்தவர்களில் 3 பெண்களுக்கு நடப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவர்களை ஒரு ஜீப் மூலமாக சூரியநெல்லிக்கு அனுப்பிவிட்டு எங்களுக்கு முன்பாக அவர்கள் இறங்கினர். சுமார் 1 மணி நேரம் கழித்து எங்கள் குழுவும் கீழே இறங்கியது. பிற்பகல் 2 மணியளவில் வரும் வழியில் ஒத்தமரம் பகுதியில் அருண் குழுவினர் மதிய உணவு அருந்திவிட்டு ஓய்வாக இருந்தார்கள்.
வழிகாட்டி ரஞ்சித், காட்டுத்தீ அருகில் வந்துவிட்டதால் நாம் வேகமாக கீழே இறங்க வேண்டும் என்று வேறு பாதை வழியாக எங்களையும், அருண் குழுவினரையும் அழைத்துவந்தார். வரும் வழியில் அசம்பாவிதமாக காட்டுத்தீ வேகமாக எங்களை நெருங்கியதால் குழுவாக வந்த நாங்கள் தப்பிக்கும் நோக்கோடு நாலாபுறமும் பிரிந்து சென்றோம்.
அதற்குள் காட்டுத்தீ முழுக்க சூழ்ந்துவிட்டது. நானும் ரஞ்சித், சாதனா, பாவனா, நேகா, ராஜசேகர், அருணுடன் வந்தவர்களில் 3 பெண்கள் மட்டும் தப்பித்து குரங்கணிக்கு வந்துவிட்டோம். காட்டுத்தீ அணைந்த பிறகு போலீசார், வனத்துறையினருடன் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது 9 பேர் கருகி இறந்து கிடந்தனர்.
குரங்கணி மலை காட்டுத் தீயில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து வனத்துறையினரும், காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பிரபு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குரங்கணி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது? அதற்கு யாரும் காரணமா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த மலையேற்றப் பயிற்சிக்கு சென்றவர்கள் முறையாக அனுமதி பெறவில்லை என்றும், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் முதலில் கூறப்பட்டது. ஆனால் பிரபு அளித்துள்ள வாக்குமூலத்தில் வனத்துறை சோதனை சாவடியில் ஒரு நபருக்கு ரூ.200 வீதம் கட்டணம் செலுத்தியதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், போடி வனச்சரகத்தில் பணியாற்றும் வனவர் ஜெய்சிங் என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையை சேர்ந்த மேலும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story