சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவரிடம் போலீஸ், வருவாய்த்துறையினர் விசாரணை


சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவரிடம் போலீஸ், வருவாய்த்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 14 March 2018 4:00 AM IST (Updated: 14 March 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவரிடம் போலீஸ், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மலையேற்ற பயிற்சிக்கு வழிகாட்ட வன ஊழியர் தான் தன்னை அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.

தேனி,

குரங்கணி தீ விபத்து தொடர்பாக போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மலையேற்ற பயிற்சிக்கு சென்ற ஈரோடு குழுவினருக்கு வழிகாட்டியாக போடி முந்தல் பகுதியை சேர்ந்த ரஞ்சித் சென்றார். காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், இந்த சம்பவம் குறித்து ரஞ்சித்தை பிடித்து குரங்கணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ரஞ்சித் ஆட்டோ ஓட்டி வருகிறார். வனத்துறையில் தீத்தடுப்பு பணியாளராக சிறிது காலம் பணியாற்றி உள்ளார். இதில் போடி வனப்பகுதி குறித்து அவர் நன்கு அறிந்துள்ளார். அதன் மூலம் மலையேற்ற பயிற்சிக்கான சுற்றுலா வழிகாட்டியாக அவ்வப்போது செயல்பட்டு வந்துள்ளார். கடந்த 10-ந்தேதி வன ஊழியர் ஒருவர், அழைத்ததன் பேரில் ஈரோடு குழுவினருக்கு வழிகாட்டியாக சென்றதாக விசாரணையில் கூறினார்.

மேலும், திரும்பி வரும் போது ஒத்தமரம் பகுதியில் தீ பரவியது. இதுகுறித்து தன்னை அனுப்பி வைத்த வன ஊழியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தாராம். சுற்றுலா பயணிகளிடமும், தீ விபத்து அபாயம் உள்ளது மாற்றுப்பாதையில் செல்லலாம் என்றும் கூறியுள்ளார். பின்னர் அவர் தன்னுடன் வந்தவர்களை அழைத்துக் கொண்டு, அங்கிருந்த காட்டாறு பகுதியை கடந்து வந்துள்ளார். அவருடன் வந்தவர்கள் லேசான காயங்களுடன் தப்பி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் ரஞ்சித் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி விசாரணை நடத்தினார். அப்போதும், அவர் வன ஊழியர் தன்னை அனுப்பி வைத்த தகவலை தெரிவித்துள்ளார்.

வனத்துறை ஊழியர் தான் அனுப்பி வைத்தார் என்று வழிகாட்டி ரஞ்சித் கூறி உள்ளது, இந்த சம்பவத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் காட்டுத்தீ ஏற்பட்டது குறித்தும், அனுமதியின்றி மலையேற்றம் சென்றார்களா? என்பது குறித்தும் விசாரணை தொடங்கி உள்ளது.

மாவட்ட நிர்வாகம் ஒருபுறமும், மாவட்ட வனத்துறை நிர்வாகம் ஒருபுறமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் , மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

போடி வனச்சரக பகுதியில் பணியாற்றும் ஊழியர்களிடம் மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் நேற்று தனித்தனியாகவும், மொத்தமாகவும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். வருவாய்த்துறை அதிகாரிகள் குரங்கணி கிராமத்துக்கு சென்று மக்களிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

விசாரணை தற்போது தான் தொடக்க நிலையில் உள்ளது என்றும், ஓரிரு நாட்களில் விசாரணை முடிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story