இரட்டை ரெயில் பாதை பணிகள் நிறைவு: கல்பட்டிசத்திரம்-தாமரைப்பாடி தண்டவாளத்தில் அதிகாரிகள் ஆய்வு


இரட்டை ரெயில் பாதை பணிகள் நிறைவு: கல்பட்டிசத்திரம்-தாமரைப்பாடி தண்டவாளத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 14 March 2018 3:45 AM IST (Updated: 14 March 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

கல்பட்டிசத்திரம்-தாமரைப்பாடி இடையே தண்டவாள பகுதிகளை ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த வழித்தடத்தில் விரைவில் ரெயில் சேவை தொடங்கும் என்று தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தெரிவித்தார்.

திண்டுக்கல்,

விழுப்புரத்தில் இருந்து திண்டுக்கல் வரை சுமார் 280 கிலோ மீட்டருக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி நடந்து வந்தது. மற்ற பகுதிகளில் அனைத்து பணிகளும் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஆனால் திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடி-கல்பட்டிசத்திரம் வரை உள்ள ரெயில் தடத்தில் மட்டும் பணிகள் முடிவடையாமல் இருந்தது.

நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்குதல் உள்பட பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தன. பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்டவாளங்கள் பொருத்தும் பணி முடிவடைந்து, சிக்னல் இணைப்புகள் கொடுக்கும் பணி நடந்தன. தற்போது அந்த பணிகளும் முழுமையாக முடிவடைந்து விட்டது.

இந்தநிலையில் நேற்று, தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தாமரைப்பாடி-கல்பட்டிச்சத்திரம் இடையே உள்ள தண்டவாளங்களை ஆய்வு செய்தார். அப்போது தண்டவாளங்கள் பொருத்தப்பட்டுள்ள விதம், அதன் உயரம், 2 தண்டவாளங்களுக்கு இடையே உள்ள அளவுகள் சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

மேலும் தண்டவாளத்தில் பதிக்கப்பட்டுள்ள சிமெண்டு கற்களின் தரம், சிக்னல் இணைப்புகள், லெவல் கிராசிங், தண்டவாளத்துக்கும், மின்கம்பங்களுக்கும் இடையே உள்ள தூரம் உள்பட பல ஆய்வுகளை செய்தார். இந்த ஆய்வின் துணை ஆணையர்கள் சீனிவாஸ், மணி, மதுரை மண்டல ரெயில்வே மேலாளர் நீனு இத்தியாரா உள்பட சுமார் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் 7 டிராலிகளில் சென்று இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

முன்னதாக தாமரைப்பாடி ரெயில் நிலையத்தில் வைத்து அவர், நிருபர்களிடம் கூறுகையில், திண்டுக்கல்-திருச்சி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணியில் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டும் பணிகள் முடிவடையாமல் இருந்தது. அந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதால் இந்த வழித்தடத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.

இதில் அளவீடுகள், பாதுகாப்பு தன்மை உள்பட பல அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். பின்னர் இதுகுறித்து அறிக்கை அளிக்கப்படும். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து உயர் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியதும் ரெயிலை இயக்குவது குறித்து முடிவெடுப்பார்கள். விரைவில் இந்த வழித்தடத்தில் ரெயில் இயக் கப்படும், என்றார். 

Next Story