ஜல்லிக்கட்டில் காளை முட்டி வாலிபர் பலி போலீஸ்காரர் உள்பட 13 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் காளை முட்டி வாலிபர் பலி போலீஸ்காரர் உள்பட 13 பேர் காயம்
x
தினத்தந்தி 14 March 2018 4:30 AM IST (Updated: 14 March 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் போலீஸ்காரர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள தான்றீஸ்வரத்தில் சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடத்த கிராமத்தினர் முடிவு செய்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்கான பணிகள் நிறைவு பெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக கொண்டு வரப்பட்ட காளைகளை, கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து அனுமதி வழங்கினர். மேலும் மாடுபிடி வீரர்களை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த பின்னர் களத்திற்கு செல்ல அனுமதித்தனர். அதனை தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுக்கான உறுதிமொழியை எடுத்து கொண்டனர். ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, கரூர், விராலிமலை மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 658 காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் குவாட்டுபட்டியை சேர்ந்த முத்து (வயது 25) என்பவரின் ஜல்லிக்கட்டு காளையும் பங்கேற்றது.

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 188 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடின.

ஜல்லிக்கட்டுக்கு நண்பர்களுடன் வந்த முத்து தனது காளையை அவிழ்த்து விட்டார். பின்னர் வாடிவாசல் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது வாடி வாசலில் இருந்து வெளியே சென்ற காளை ஒன்று மீண்டும் வாடிவாசலில் உள்ளே வந்தது. இதையறியாமல் அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த முத்துவை காளை மார்பக பகுதியில் குத்தி தூக்கியது. இதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனால் ஜல்லிக்கட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முத்துவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஆயுதப்படையை சேர்ந்த போலீஸ்காரர் ஆனந்த், மாடுபிடி வீரர்கள் முருகேசன், வெள்ளைச்சாமி, யோகேஸ், பிரகாஷ், பார்வையாளர்கள் அழகர், ராமச்சந்திரன், ராம்கி, விஜய் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் காயமடைந்த போலீஸ்காரர் ஆனந்த் உள்பட 4 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயம், ஹெல்மெட், குத்துவிளக்கு, செல்போன், கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சின்னதம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி, ஆத்மாகுழு தலைவர் சாம்பசிவம், இலுப்பூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜகுரு மன்னார், இலுப்பூர், அன்னவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story