டிக்கெட் பரிசோதகர் உதவியின்றி ரெயிலில் படுக்கை வசதி ஒதுக்கீடு செய்வதற்கு புதிய செயலி, ரெயில்வே நிர்வாகத்துக்கு பரிந்துரை


டிக்கெட் பரிசோதகர் உதவியின்றி ரெயிலில் படுக்கை வசதி ஒதுக்கீடு செய்வதற்கு புதிய செயலி, ரெயில்வே நிர்வாகத்துக்கு பரிந்துரை
x
தினத்தந்தி 14 March 2018 3:15 AM IST (Updated: 14 March 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் உதவியின்றி, படுக்கை வசதி ஒதுக்கீடு செய்வதற்கான புதிய செயலி ரெயில்வே நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது.

கோவை,

ரெயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மற்றும் ரெயில்நிலைய கவுண்ட்டர்களில் எடுக் கும் போது உறுதி செய்யப்பட்ட(கன்பார்ம்டு) டிக்கெட் கிடைக்கும். ஒருவேளை அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்த பின்னர் ஆர்.ஏ.சி.(ரிசர்வேஷன் அகெய்ன்ஸ்டு கேன்சலேசன்) மற்றும் காத்திருக்கும் (வெயிட்டிங்) டிக்கெட் கிடைக்கும். அந்த டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரெயிலில் பயணம் செய்யலாம். ஆனால் அவர்களில் ஆர்.ஏ.சி. டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரெயில் இருக்கையில் உட்கார்ந்து செல்வதற்கு தகுதியானவர்கள். ஆனால் அவர்கள் படுக்கை வசதியை பயன்படுத்த முடியாது. இதே போல காத்திருக்கும் டிக்கெட் வைத்திருப்பவர்கள் முன்பதிவு இல்லாத பெட்டியில் தான் பயணம் செய்ய முடியும்.

இந்த நிலையில் அந்த ரெயிலில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் ஏதாவது காரணங்களினால் தங்கள் டிக்கெட்டை ரத்து செய்தால் அந்த இருக்கை வசதியை முதலில் ஆர்.ஏ.சி. ஒதுக்கீடுதாரர்களுக்கும் அதைத்தொடர்ந்து காத்திருக்கும் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் வரிசைப்படி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

ஆனால் இந்த ஒதுக்கீட்டை ரெயில் டிக்கெட் பரிசோதகர்(டி.டி.இ.) ரெயில் புறப்பட்ட பின்னர் செய்கிறார். இதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. ரெயில் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு சென்று ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருக்கும் டிக்கெட் வைத்திருப்பவர்கள் டிக்கெட் பரிசோதகரை அணுகி படுக்கை வசதி கிடைக்குமா? என்று கேட்பார்கள். அதற்கு அவர் தான் வைத்திருக்கும் பயணிகளின் பட்டியலை பார்த்து விட்டு ரெயிலில் ஏறுங்கள். ஒரு மணி நேரம் கழித்தோ அல்லது அடுத்த ரெயில் நிலையம் வரும்போதோ சொல்கிறேன் என்று கூறுவார்.

அவர் சொல்வதை நம்பி ரெயிலில் ஏறி டிக்கெட் பரிசோதகர் பின்னாலேயே செல்ல வேண்டும். அவர் எப்போது படுக்கை வசதி ஒதுக்கீடு செய்து தருகிறாரோ அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். இதுதவிர படுக்கை வசதி ஒதுக்கீடு செய்வதில் டிக்கெட் பரிசோதகர் வேண்டியவர்களுக்கு பாரபட்சம் காட்டுகிறார். பணம் கொடுப்பவருக்கு ஒதுக்கீடு செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழும்.

இத்தகைய குற்றச்சாட்டுகளை தவிர்க்க, கோவை நுகர்வோர் அமைப்பின் தலைவர் ஜெயராமன் ஒரு புதிய செயலியை(ஆப்) வடிவமைத்துள்ளார். தற்போது ரெயில்வே துறையில் காகித பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக பயணிகளின் விவரங்கள் அடங்கிய பட்டியலை காகிதத்தில் வைத்திருப்பதற்கு பதில் ரெயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர்களுக்கு கையடக்க மடிக்கணினி(டேப்) கொடுக்க வேண்டும். இதன் விலை ரூ.ஆயிரம் வரை தான் இருக்கும்.

அந்த கையடக்க மடிக்கணினியில் ஒரு பெட்டியில் 72 பயணிகள் இருந்தால் எந்தெந்த பயணிகள் ரெயிலில் ஏறியிருக்கிறார்களோ அவர்களின் டிக்கெட் மற்றும் அடையாள அட்டைகளை ஸ்கேன் செய்தால் அந்த டிக்கெட் அவர்களுடையது தான் என்பதை கையடக்க கணினி உறுதி செய்து விடும். டிக்கெட் பரிசோதகர் ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லும் போது முதல் பெட்டியில் உள்ள 72 பயணிகளில் எத்தனை பயணிகள் வந்திருக்கிறார்கள், எவ்வளவு பேர் வரவில்லை? என்ற விவரங்கள் கையடக்க மடிக்கணினியில் தெரிந்து விடும்.

உதாரணத்துக்கு 72 படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 60 பயணிகள் வந்து, 12 பயணிகள் வராமல் இருந்தால் அந்த 12 படுக்கைகளும் முதலில் ஆர்.ஏ.சி. டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கும் அதைத் தொடர்ந்து காத்திருக்கும் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கும் அந்த கையடக்க கணினியே ரெயில்வே நிர்வாகத்தின் ஐ.ஆர்.சி.டி.சி. சர்வர் வழியாக பயணிகளின் செல்போனுக்கு தகவல் அனுப்பும். யார் முதலில் டிக்கெட் எடுத்திருக்கிறார்களோ அவர்களுக்கு முதலிலும், அடுத்து மற்றவர்களுக்கும் வரிசைப்படி கையடக்க மடிக் கணினியே படுக்கை வசதியை ஒதுக்கீடு செய்து விடும்.

இதற்கு அந்த டிக்கெட் பரிசோதகர் ‘கோ அகெட்’ என்ற பட்டனை அழுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து பயணிகளுக்கு அவர்களின் செல்போனுக்கு உங்களுக்கு இந்த எண் உள்ள பெட்டியில், இந்த எண் உள்ள படுக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.)சென்று விடும். அதை பார்த்து பயணி அந்த படுக்கை வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். பயணி டிக்கெட் எடுக்கும் போது இருக்கைக்கு மட்டும் தான் கட்டணம் செலுத்தியிருப்பார். படுக்கை வசதிக்கு கட்டணம் செலுத்தியிருக்க மாட்டார். பயணிக்கு படுக்கை வசதி ஒதுக்கப்பட்ட பின்னர் அதற்கான கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பாங்கிங் மூலம் டிக்கெட் பரிசோதகர் வைத்திருக்கும் கையடக்க மடிக்கணினி மூலம் பயணி செலுத்தி விடலாம். இந்த செயலி மூலம் டிக்கெட் பரிசோதகர் பாரபட்சமாக செயல்பட்டார் என்று கூற முடியாது. பணம் கைமாறியது என்றும் குற்றம் சாட்ட முடியாது. யாருடைய செல்வாக்கும் தேவையில்லை.

இந்த புதிய செயலியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா இன்று(புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அறிமுகம் செய்கிறார்.

அதன்பின்னர் அந்த செயலி ரெயில்வே நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது. 

Next Story