கண்ணமங்கலம் அருகே தாயை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற ராணுவ வீரர் கைது


கண்ணமங்கலம் அருகே தாயை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற ராணுவ வீரர் கைது
x
தினத்தந்தி 14 March 2018 3:45 AM IST (Updated: 14 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே தாயை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற ராணுவ வீரரை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

கண்ணமங்கலம், 

கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு ஆற்காடு சாலையில் வசிப்பவர் காசியம்மாள் (வயது 67). இவரது கணவர் கண்ண கவுண்டர். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஜோதிலட்சுமி, சுகுணா என்ற 2 மகள்களும், சரவணன், கதிரவன் (37) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

இதில் கதிரவன் தற்போது மத்திய பிரதேசம் சாகரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், இவரது அக்கா ஜோதிலட்சுமியின் மகள் புஷ்பவேணிக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண்டுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மேலும் கதிரவனுக்கு காட்டுக்காநல்லூரை சேர்ந்த கங்கா என்ற பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி, அவருக்கு தாய் காசியம்மாள் சொத்து வழங்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு கதிரவன் வந்தார். அப்போது தாய் காசியம்மாளிடம் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்கக்கோரி தகராறு செய்து உள்ளார். ஆனால் காசியம்மாள், ‘கட்டிய மனைவி புஷ்பவேணியுடன் வாழாமல், வேறு பெண்ணுடன் வாழ்கிறாயே, உனக்கு எப்படி சொத்து தர முடியும்’ என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் நேற்று காலை தனது அறையில் உள்ள ஜன்னல் வழியாக, சமையலறையில் இருந்த தாய் காசியம்மாளை நோக்கி சுட்டார்.

அப்போது காசியம்மாள் வேறு வேலையாக கீழே குனிந்து விட்டதால் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் துப்பாக்கி ரவைகள் சுவர் மற்றும் சுவிட்ச் போர்டுகளில் பாய்ந்து அவை சேதமடைந்தன. இந்த துப்பாக்கியை அவர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி காஷ்மீரில் வாங்கியதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்த காசியம்மாளின் மற்றொரு மகன் சரவணன் மற்றும் உறவினர்கள் வீட்டிற்குள் புகுந்து காசியம்மாளை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் ராணுவ வீரர் கதிரவனை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து துப்பாக்கியுடன், 7 வெடிக்காத ரவைகள் மற்றும் ரவை சிதறல்களையும் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் காரணமாக கொங்கராம்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சொத்து தகராறு காரணமாக தாயை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் கதிரவன் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் ராணுவ அதிகாரிகளிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

Next Story