துணைத்திட்ட நிதியை முழுமையாக செலவு செய்யவேண்டும் - நாராயணசாமி வேண்டுகோள்


துணைத்திட்ட நிதியை முழுமையாக செலவு செய்யவேண்டும் - நாராயணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 March 2018 5:00 AM IST (Updated: 14 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

அட்டவணை இனத்த வருக்கான துணைத்திட்ட நிதியை முழுமையாக செலவு செய்யவேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை தலைமைச் செயலகத்தில் அட்டவணை இனத்தவருக்கான துணைத்திட்ட ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் அவரவர் துறைகளில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கான திட்டங்களை விளக்கி அதற்கான செலவினங்களை தெரிவித்தனர். நடப்பாண்டு ஒதுக்கீடு செய்த திட்ட நிதியில் இருந்து கடந்த மாதம் வரை செலவு செய்யப்பட்ட நிதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஆதிதிராவிட மக்களுக்காக ஒதுக்கீடு செய்யும் நிதி அந்த மக்களின் தேவையறிந்து செலவு செய்யப்பட வேண்டும். அந்த நிதியை வேறு பொது திட்டங்களுக்கு செலவு செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார்.

நடப்பாண்டு (2017-18) அட்டவணை இனத்தவருக்கான துணைத்திட்டத்தின்கீழ் ரூ.263.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதில் ரூ.177.41 கோடியை கடந்த மாதம் வரை 21 துறைகள் செலவு செய்துள்ளன. இது 67.23 சதவீதம் ஆகும். இந்த திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட நிதியினை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு 100 சதவீத செலவினை இவ்வாண்டிற்குள் எட்டவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 மற்றும் விதிகள் 2016 ஆகியவற்றை செயல்படுத்தும்பொருட்டு புதுச்சேரி மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவின் வருடாந்திர கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டங்களில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், விஜயவேணி, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் கந்தவேலு, மிகிர்வரதன், மற்றும் அரசுத்துறை இயக்குனர்கள், டி.ஐ.ஜி. ராஜீவ்ரஞ்சன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி குறித்தும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. 

Next Story