தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காவிட்டால் நடவடிக்கை, நாராயணசாமி எச்சரிக்கை


தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காவிட்டால் நடவடிக்கை, நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 March 2018 3:45 AM IST (Updated: 14 March 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள ஐ.டி.ஐ. வளாகத்தில் நேற்று அரசின் தொழிலாளர் துறை சார்பில் அரசு மகளிர் பாலிடெக்னிக், நெட்டப்பாக்கம் அரசு பாலிடெக்னிக்குகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த கையேடு வழங்குதல், ஐ.டி.ஐ. மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

விழாவுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் வரவேற்று பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தரச்சான்றிதழ்களை ஐ.டி.ஐ. முதல்வர்களிடம் வழங்கினார். மேலும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த ை-கேயட்டை வெளியிட்டு, ஐ.டி.ஐ. மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவையில் படித்துள்ள அத்தனை பேருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது. அவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுத் தரவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. சுற்றுலாவினால் புதுவையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

நமது மாநிலத்தில் கட்டுமானப் பணிகள், வயரிங் பணிகளில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு தகுதியானவர்களுக்கு பயிற்சி கொடுத்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரமுடியும். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது 60 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. தற்போது பிரதமர் மோடி அனைவருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளார்.

கடந்த வாரம் தனியார் நிறுவனம் ஒன்று திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது தொடர்பாக எங்களுடன் ஆலோசனை நடத்திச் சென்றனர். சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவிகள் நேர்முக தேர்வில் சரியாக பதில் அளிக்க முடியாததால் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. இதனை போக்கிட திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறோம்.

இதன் மூலம் இப்போது 1,850 பேர் தனியார் வேலைக்கு சென்றுள்ளனர். இந்த ஆண்டும் அதுபோன்ற பயிற்சி அளிக்க உள்ளோம். இதற்காக மத்திய திறன் மேம்பாட்டு பயிற்சி துறை போதிய நிதி கொடுக்க தயாராக உள்ளது.

இப்போது 2 ஐ.டி.ஐ.-க்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது. மீதமுள்ள ஐ.டி.ஐ.க்களும் இந்த சான்றிதழை பெற வேண்டும். தனியார் நிறுவனங்களில் உரிய சம்பளம் தரப்படுவதில்லை என்று புகார் கூறினார்கள். இதற்காக சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுப்போம். 20 நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்பி குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க கூறியுள்ளோம். அதை மீறினால் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், விஜயவேணி மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

Next Story