நிலத்தடிநீர் திருட்டை தடுக்கக்கோரி சாலைமறியல்


நிலத்தடிநீர் திருட்டை தடுக்கக்கோரி சாலைமறியல்
x
தினத்தந்தி 14 March 2018 4:30 AM IST (Updated: 14 March 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே நிலத்தடிநீர் திருட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே நிலத்தடிநீர் திருட்டை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த விளங்காடுபாக்கம் ஊராட்சியில் கண்ணம்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கண்ணம்பாளையத்தில் தனியார் சிலர் 20-க்கும் மேற்பட்ட ராட்சத ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடிநீரை திருடி டேங்கர் லாரிகளில் கொண்டு சென்று சென்னையில் உள்ள ஓட்டல்கள், தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் ஊராட்சி சார்பாக போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாய்களில் குடிநீர் வராமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், நிலத்தடிநீர் திருட்டை தடுக்கக்கோரியும், குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று காலை 200-க்கும் மேற்பட்டோர் செங்குன்றம் அருகே ஆண்டார்குப்பம் - மணலி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

தகவல் அறிந்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கூறி நிலத்தடிநீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் ஆண்டார்குப்பம் - மணலி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story