அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலையம்


அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 14 March 2018 3:30 AM IST (Updated: 14 March 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியை அடுத்த தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.

காரைக்குடி,

காரைக்குடியை அடுத்து தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. வியாபாரம் உள்ளிட்ட தேவைக்காகவும், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வருவோர் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு செல்வதற்காக இந்த ரெயில் நிலையத்தை அப்போது உருவாக்கினர். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ரெயில் நிலையத்தில் தற்போது எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது பயணிகளை வேதனையடைய செய்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தை தேவகோட்டை, அமராவதிபுதூர், கல்லுக்கட்டி, தொண்டி, புளியால் உள்ளிட்ட பல்வேறு ஊர்கை-ளைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை தொடர்பாகவும், உயர்கல்வி படிக்க செல்லவும் தினசரி பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சிவகங்கைக்கு செல்லக்கூடிய அரசு ஊழியர்கள், மாணவ-மாணவிகள் இந்த ரெயில் நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், இங்கு அனைத்து ரெயில்களும் நின்று செல்லும்.

இந்த ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை நல்ல நிலையில் இருந்தாலும் கூட, அவை எப்போதும் பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதுதவிர ரெயில் நிலையத்தில் உள்ள சுற்றுச்சுவர் முற்றிலும் சேதமடைந்து கீழே விழுந்து கிடப்பதால் மர்மநபர்கள் உள்ளே நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நிலையும் உள்ளது. மேலும் ரெயில் நிலையத்தில் ஆங்காங்கே உள்ள குடிநீர் குழாய்கள் உடைந்தும், சில குழாய்கள் காட்சி பொருளாகவும் உள்ளன. இதில் தண்ணீர் எப்போதும் வருவதில்லை. எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளின் எண்ணை அடையாளம் காண்பதற்காக ரெயில் நிலையங்களில் வைத்திருக்கும் டிஜிட்டல் போர்டுகள் இல்லாமல், வெறும் கம்பிகள் மட்டுமே உள்ளது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் குழப்பமடைந்து வருகின்றனர். எனவே தென்னக ரெயில்வே நிர்வாகத்தினர் இந்த ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story