ஹால் டிக்கெட்டை கிழித்து, முகத்தில் திராவகம் வீசுவதாக மிரட்டல்: பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


ஹால் டிக்கெட்டை கிழித்து, முகத்தில் திராவகம் வீசுவதாக மிரட்டல்: பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 March 2018 4:30 AM IST (Updated: 14 March 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே ஒருதலைக்காதலால் பிளஸ்-2 மாணவியை மிரட்டிய மாணவர் ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்து முகத்தில் திராவகம் வீசுவதாக கூறியதால் மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தேவீரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். கூலித்தொழிலாளி. இவரது மகள் தமிழரசி (வயது17). இவர் அருகில் உள்ள அகரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பிளஸ்-2 தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவி தமிழரசி தொடர்ந்து தேர்வு எழுதி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்வு எழுதி விட்டு மாணவி தமிழரசி தேவீரஅள்ளி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயதுடைய ஒரு மாணவர் அங்கு வந்தார். அந்த மாணவர், மாணவி தமிழரசியை வழிமறித்து, தான் அவரை காதலித்து வருவதாகவும், தன்னை காதலிக்குமாறும் கூறினார். அதற்கு மாணவி தமிழரசி, அவரை கண்டித்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றார்.

அப்போது ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் தமிழரசியின் பிளஸ்-2 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) மற்றும் கணித புத்தகம் ஆகியவற்றை கிழித்து அவரது முகத்தில் வீசினார். மேலும் தனது காதலை மரியாதையாக ஏற்றுக்கொள். இல்லாவிட்டால் உன் மீது திராவகத்தை ஊற்றி விடுவேன் என்றும், அந்த மாணவியை சாதி பெயரை கூறி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அதே பள்ளியைச் சேர்ந்த 17 வயதுடைய மற்றொரு மாணவனும் உடந்தையாக அருகில் இருந்ததாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி தமிழரசி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார். அவர் தனது தந்தை சங்கரிடம் நடந்ததை கூறி அழுதார். இதையடுத்து அவர் தனது மகளை சமாதானப்படுத்தி அந்த பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் நடந்ததை கூறினார். இதைத்தொடர்ந்து அந்த ஆசிரியர் இதுதொடர்பாக நாளை பேசலாம் என்று நேற்று முன்தினம் இரவு தெரிவித்தார்.

இந்த நிலையில் ஹால் டிக்கெட் கிழிக்கப்பட்டதால் தன்னால் தொடர்ந்து தேர்வு எழுத முடியாது என்ற வேதனையிலும், ஒருதலைக்காதல் என்ற பெயரில் தன்னை மிரட்டி வருவதை எண்ணியும் வருத்தமடைந்த மாணவி தமிழரசி நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார். இதைக் கண்ட உறவினர்கள் பதறி போய் தமிழரசியை மீட்டு சிகிச்சைக்காக காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தமிழரசி வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தமிழரசியின் உடல் பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் தமிழரசியின் உறவினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் காவேரிப்பட்டணத்தில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவியின் மரணத்திற்கு காரணமான பிளஸ்-2 மாணவரையும், உடன் சென்ற மாணவரையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அப்போது சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும் அவர்கள் சாலை மறியலை கைவிடாததால் அவர்களை குண்டுகட்டாக போலீசார் தூக்கி, அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த பிரச்சினை காரணமாக காவேரிப்பட்டணம் அருகே பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 

Next Story