குரங்கணி காட்டுத்தீயில் பலியான குமரி மாவட்ட என்ஜினீயரின் உடல் சொந்த ஊரில் தகனம்


குரங்கணி காட்டுத்தீயில் பலியான குமரி மாவட்ட என்ஜினீயரின் உடல் சொந்த ஊரில் தகனம்
x
தினத்தந்தி 14 March 2018 4:30 AM IST (Updated: 14 March 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் பலியான குமரி மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயரின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

திருவட்டார்,

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்தவர் விபின் (வயது 34), என்ஜினீயரிங் பட்டதாரி. இவரது மனைவி திவ்யா (30). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு விபின் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள மாமனார் விஸ்வநாதனின் மரஅறுவை ஆலையை கவனித்து வந்தார்.

இந்தநிலையில் விபினும், அவருடைய மனைவி திவ்யாவும், தேனி மாவட்டம் குரங்கணிக்கு மலையேறும் பயிற்சிக்கு சென்றனர். அப்போது, அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இதில் விபின் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காட்டுத்தீயில் இறந்த விபின், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத்தின் உறவினர் ஆவார். இந்தநிலையில், விபினின் உடல் நேற்று முன்தினம் இரவில் அவரது சொந்த ஊரான மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்த உறவினர்களும், நண்பர்களும் கதறி அழுதனர்.

விபின் உடலுக்கு எம்.எல்.ஏ.க்கள். ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் நாஞ்சில் சம்பத் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, நேற்று மதியம் 12 மணியளவில் வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உள்பட்ட சித்திரங்கோடு மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.


Next Story