மோட்டார் சைக்கிள் மோதி தனியார் பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி தனியார் பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் சாவு
x
தினத்தந்தி 14 March 2018 3:30 AM IST (Updated: 14 March 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

கோலார் அருகே, மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த தனியார் பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் உயிரிழந்தார். அவரது உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

கோலார் தங்கவயல்,

கோலார் டவுனை சேர்ந்தவர் கோபாலரெட்டி. இவர் கோலார் மாவட்ட தனியார் பள்ளி ஆசிரியர் சங்க தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு கோபாலரெட்டி சென்னை-கோலார் தேசிய நெடுஞ்சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சிலர் போட்டிபோட்டி கொண்டு சென்றனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் கோபாலரெட்டி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபாலரெட்டி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு வந்ததும் அவர் உடல் ஆம்புலன்சில் இருந்து கீழே இறக்கப்பட்டது. அப்போது அங்கு குவிந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள், கோபாலரெட்டியின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர்.

போராட்டம் பற்றி அறிந்த போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்துகின்றனர். அப்போது அவர்கள் வேகமாக செல்வதால் நிறைய உயிரிழப்பு ஏற்படுகிறது. இதுபோல மோட்டார் சைக்கிளில் பந்தயம் சென்றவர் மோதியதில் தான் கோபாலரெட்டி இறந்து உள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். அதன்பின்னர் கோபாலரெட்டி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக கோலார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோலார் அருகே வடகூர் கேட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் 30 பேரிடம் போலீசார் தலா ரூ.1,500-ஐ அபராதமாக விதித்தனர். மேலும் இதுபோன்று வேகமாக செல்ல கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story