காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனூர் சிவசங்கரப்பா பா.ஜனதாவில் சேருகிறாரா?


காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனூர் சிவசங்கரப்பா பா.ஜனதாவில் சேருகிறாரா?
x
தினத்தந்தி 14 March 2018 4:00 AM IST (Updated: 14 March 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனூர் சிவசங்கரப்பா பா.ஜனதாவில் சேருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாமனூர் சிவசங்கரப்பா. இவர் சித்தராமையா அரசில் தோட்டக்கலைத்துறை மந்திரியாக 2½ ஆண்டுகள் பணியாற்றினார். அவருக்கு வயதாகிவிட்டதால், அந்த மந்திரி பதவி அவருடைய மகன் எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சாமனூர் சிவசங்கரப்பா அகில இந்திய லிங்காயத்-வீரசைவ மகாசபா தலைவராகவும் உள்ளார்.

இந்த நிலையில் லிங்காயத், வீரசைவ தனித்தனி சமூகங்கள் என்றும், லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இதற்கு பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, சாமனூர் சிவசங்கரப்பா உள்பட வீரசைவ பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு, லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கலாம் என்று பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை குறித்து மாநில அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில் துமகூருவில் எடியூரப்பாவும், சாமனூர் சிவசங்கரப்பாவும் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து உணவு சாப்பிட்டனர். இதனால் சாமனூர் சிவசங்கரப்பா பா.ஜனதாவில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்ற கருத்து தெரிவித்த சாமனூர் சிவசங்கரப்பா, “நான் அப்பட்டமான காங்கிரஸ்காரன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் உள்ளேன். காங்கிரசை விட்டு விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. துமகூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். அதில் எடியூரப்பாவும் பங்கேற்றார். நாங்கள் சேர்ந்து உணவு சாப்பிட்டோம். அதை வைத்து நான் பா.ஜனதாவில் சேருவதாக கூறுவது தவறானது. எக்காரணம் கொண்டும் நான் காங்கிரசை விட்டு விலக மாட்டேன். லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கும் விவகாரம் குறித்து கர்நாடக மந்திரிசபை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்“ என்றார்.

Next Story