காவேரிப்பாக்கத்தில் பள்ளி வேன் மோதி சிறுவன் பலி
காவேரிப்பாக்கத்தில் பள்ளி வேன் மோதி சிறுவன் பலியானான். வேன் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பனப்பாக்கம்,
காவேரிப்பாக்கத்தில் உள்ள சோமு முதலி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), பால் வியாபாரி. இவரது மனைவி மகாலட்சுமி (23). இவர்களுக்கு ரஷித்தா (6), சாய்பிரியா (1) என்ற இரு மகள்களும், சர்வின்குமார் (5) என்ற மகனும் உண்டு. சர்வின்குமார், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.
வழக்கம்போல், பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த சர்வின்குமார் தெருவில் நேற்று விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது அத்திப்பட்டில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமான வேன் ஒன்று அந்த வழியாக வந்தது. திடீரென அந்த வேன் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த சர்வின்குமார் மீது மோதியது.
இதில் சர்வின்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். எனினும் வேன் நிற்காமல் சென்றது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஓடிச் சென்று வேனை மடக்கி கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பொதுமக்கள் வேன் டிரைவரிடம் பள்ளி குழந்தைகளை ஏற்றி வரும்போது கவனமாக வராமல் செல்போனில் ‘ஹெட்போன்’ மூலம் பாட்டு கேட்டுக் கொண்டு வேனை ஓட்டி வருகிறாயே? எனக் கேட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, படுகாயம் அடைந்த சர்வின்குமாரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சர்வின்குமார் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் பள்ளி வேன் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Related Tags :
Next Story