ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து கடலூர் கெடிலம் ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணி தீவிரம்
கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடுகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியில் கரையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர்,
கடலூர் அருகே ஓட்டேரியில் இருந்து தேவனாம்பட்டினம் வரை 22 கிலோ மீட்டர் தூரம் கெடிலம் ஆற்றின் இரு கரைகளையும் பலப்படுத்தும் பணி ரூ.22½ கோடி செலவில் பொதுப்பணித்துறையினர் மூலம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு வருகின்றன.
இதன்படி கடலூர் புதுப்பாளையத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை 300-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் வீடுகளை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு மாற்று இடம் நகர பகுதியிலேயே வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்காமலேயே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். பின்னர் அந்த இடங்களை பொதுப்பணித்துறையினர் அளவீடு செய்து சீரமைத்தனர். நேற்று முதல் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்ட இடத்தில் லாரிகள் மூலம் மண் கொட்டப்பட்டு கரைகள் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியை பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர். புதுப்பாளையத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் ஆக்கிரமிப்பு வீடுகள் எடுக்கப்பட்ட இடங்களில் கரைகள் பலப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் எப்போது கிடைக்கும் என்று தாசில்தார் பாலமுருகனிடம் கேட்ட போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த வாரம் மாற்று இடம் வழங்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story