அரசு காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்


அரசு காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 14 March 2018 5:00 AM IST (Updated: 14 March 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர தவறிவிட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவது குறித்தும், அரசு காலிபணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்தும் நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் அரசிடம் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருந்தது. இதன்படி நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல் இந்த பிரச்சினையை கையில் எடுத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மராட்டியத்தில் பொதுப்பணித்துறையில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆனால் பொதுபணித்துறை சமீபத்தில் வெறும் 69 ஆயிரம் காலிபணியிடங்களுக்கு மட்டுமே பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளது.

எனவே பொதுப்பணித்துறை ஆள்சேர்ப்பு வேலையை நிறுத்திவிட்டது போலவே ேதான்றுகிறது. மத்திய அரசு ஆண்டுதோறும் புதிதாக 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆள்சேர்ப்பு பணி 30 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார்.

மேலும் அவர் கூறுகையில், நாங்கள் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் குறித்து சீராய்வு செய்து வருகிறோம். விரைவில் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று உறுதிபட கூறினார்.'

Next Story