வீடு புகுந்து கர்ப்பிணியிடம் 11 பவுன் நகை பறிப்பு கொள்ளையன் கைது


வீடு புகுந்து கர்ப்பிணியிடம் 11 பவுன் நகை பறிப்பு கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 14 March 2018 4:25 AM IST (Updated: 14 March 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் வீடு புகுந்து கர்ப்பிணியிடம் 11 பவுன் நகையை வாலிபர் பறித்தார். பிடிக்கச் சென்றவர்களை கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். நேற்று பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.

நெல்லை,

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி நந்தினி (வயது 25). நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். பேறுகாலத்துக்காக நந்தினி, நெல்லை வண்ணார்பேட்டை பரணிநகர் சவுடாம்பிகா நகரில் உள்ள தந்தை பொன்ராஜ் வீட்டுக்கு சென்றார்.

பொன்ராஜ் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதுவும் அந்த வீட்டின் மாடியில் பொன்ராசும், கீழ் பகுதியில் வீட்டின் உரிமையாளரும் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நந்தினி மாடி வீட்டில் தனியாக இருந்தார். அவருடைய பெற்றோர் மற்றும் கீழ்வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்தான். அவன் மொட்டை மாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்த அவன், நந்தினி இருந்த அறைக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டினான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். உடனே மர்மநபர் கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினான். அவனை பின்தொடர்ந்து கூச்சலிட்டவாறு நந்தினி தட்டுத்தடுமாறி வந்தார்.

அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் மர்மநபர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து ரோட்டில் தப்பி ஓட்டம் பிடித்தார்.

அந்த பகுதி பொதுமக்கள் அவனை விரட்டிச் சென்றனர். அந்த நபர் அங்கும் இங்குமாக ஓடி அந்த பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்துக்குள் புகுந்தான். வேறு வழியின்றி அங்கேயே பதுங்கினான். இதனை அருகில் உயரமான கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பார்த்தனர்.

அவர்கள் கீழே இறங்கி வந்து அவன் பதுங்கியுள்ள இடத்தை பொதுமக்களிடம் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அந்த குறிப்பிட்ட கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். ஆனால் கொள்ளையனை பிடிக்க முயற்சி செய்த போது அவன் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டினான்.

இதற்கிடையே நகை பறிப்பு சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கத்தியை காட்டி பொதுமக்களை, கொள்ளையன் மிரட்டியதை அறிந்த போலீசார் துணிகரமாக அந்த கட்டிடத்துக்குள் புகுந்தனர். அங்கு இருந்த கொள்ளையனை மடக்கி பிடித்தனர். கொள்ளையனிடம் இருந்து கத்தி மற்றும் நகையை போலீசார் மீட்டனர்.

பின்னர் அவனை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவனது பெயர் ஆசைத்தம்பி (30), பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. இவன் ஏற்கனவே பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர்.

பாளையங்கோட்டையில் நேற்று நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story