பள்ளிகொண்டாவில் காளை விடும் திருவிழா


பள்ளிகொண்டாவில் காளை விடும் திருவிழா
x
தினத்தந்தி 15 March 2018 3:30 AM IST (Updated: 14 March 2018 11:40 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டாவில் விறுவிறுப்பாக நடந்த காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

அணைக்கட்டு, 

பள்ளிகொண்டா பேரூராட்சி யாதவர் தெருவில் நேற்று காளைவிடும் விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள வேலூர் கொணவட்டம், ஆலங்காயம், குடியாத்தம், வாணியம்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 154 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. காளைவிடும் வீதியின் இருபுறமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

காளைகளை விரட்டுவதற்கும், தொடுவதற்கும் இளைஞர்கள் திரண்டிருந்தனர். அதேபோல் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடுவதை பார்ப்பதற்காக பொதுமக்கள் மாடி வீடுகள் மீதும், கோவில் மதில் சுவர்கள் மீதும் வேடிக்கை பார்க்க நின்றிருந்தனர்.

விழா தொடங்குவதற்கு முன்பு பள்ளிகொண்டா கால்நடை டாக்டர்கள் பாண்டியன், சுரேஷ் மற்றும் உதவி டாக்டர்கள், காளைகளை பரிசோதித்த பிறகே போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்தனர்.

விழாவை அணைக்கட்டு தாசில்தார் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து வாடிவாசலில் இருந்து தெருவுக்குள் காளைகள் விடப்பட்டன. அவை போட்டி போட்டுக் கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து ஓடின. காளை ஓடும் பாதையில் அதிக அளவில் இளைஞர்கள் குவிந்திருந்ததால் அவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென கோட்டாட்சியர் செல்வராசு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு ஒலிபெருக்கி மூலம் கூறினர்.

இளைஞர்கள் காளைஓடும் பாதையில் இடையூறாக நின்றதால் போட்டி அரை மணிநேரம் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் வன விலங்கு நல அலுவலர் மிட்டல் குழுவினர் பாதையை ஆய்வு செய்தனர்.

அப்போது பொதுமக்களுக்கு காயம் ஏற்படாமலும் சீறிப்பாய்ந்து வரும் காளைகளுக்கு காயம் ஏற்படாதவாறு போட்டி நடத்துமாறு கோட்டாட்சியர் கேட்டுக்கொண்டார். அதன்பேரில் இடையூறாக இருந்த இளைஞர்களை போலீசார் அப்புறப்படுத்திய பிறகே போட்டி தொடர்ந்து நடைபெற்றது. இளைஞர்களின் ஆரவாரத்தில் காளைகள் மிரண்டு தெருவில் அங்கும் இங்குமாக ஓடின.

சில காளைகள் பாதுகாப்பு தடுப்பு கம்புகளை தாண்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வாலிபர்களை முட்டி தூக்கி வீசியது இதில் 9பேர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு பொய்கை ஆரம்ப சுகாதாரா நிலைய டாக்டர்கள் வினோத், சாந்தினி தலைமையிலான மருத்துவ குழுவினர் உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்தனர். சீறிப்பாய்ந்து ஓடிய 2 காளைகள் தடுப்பு கம்புகளை உடைத்துக் கொண்டு அருகில் உள்ள நீர்வரத்து கால்வாயில் விழுந்து காயம் அடைந்தது.

விறுவிறுப்பாக நடந்த விழாவில் குறைந்த நேரத்தில் ஓடிய காளைக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.35 ஆயிரமும் இவை உள்பட 43 பரிசுகள் வெற்றிபெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

பள்ளிகொண்டா வருவாய் ஆய்வாளர் தேவிகலா கிராம நிர்வாக அலுவலர்கள் சக்கரவர்த்தி, ஞானசுந்தரி, கீதா, கிராம உதவியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளிகொண்டா யாதவர்தெரு இளைஞர் நற்பணி மன்றத்தினரும், ஊர் பொது மக்களும் செய்திருந்தனர்.

Next Story