மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க போலீசாருக்கு, டி.ஐ.ஜி. உத்தரவு


மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க போலீசாருக்கு, டி.ஐ.ஜி. உத்தரவு
x
தினத்தந்தி 15 March 2018 3:30 AM IST (Updated: 15 March 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை அமைத்து 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அனுசுயாடெய்சி எர்னஸ்ட், ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருந்தால் உடனே அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும். அதுபோல் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளை நடக்காமல் இருக்க தனிப்படை அமைத்து 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தமிழகத்திலேயே தேசிய நெடுஞ்சாலைகள் அதிக தூரம் கொண்ட மாவட்டமாக விழுப்புரம் இருப்பதால் சாலை விபத்துகள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த விபத்துகளை தடுக்க முக்கிய சாலைகளில் தடுப்புக்கம்பிகள் அமைத்து சீரான வேகத்தில் வாகனங்கள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுக்க அனைத்து சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும். சாராயம் காய்ச்சுதல், பதுக்குவது, விற்பனை செய்வதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.

தொடர்ந்து, மதுபாட்டில்கள் கடத்தல், சாராய விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுபோல் தொடர்ந்து ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story