வங்கதேசத்தினர் ஒரு லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை கர்நாடக அரசு மீது பா.ஜனதா குற்றச்சாட்டு


வங்கதேசத்தினர் ஒரு லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை கர்நாடக அரசு மீது பா.ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 March 2018 2:15 AM IST (Updated: 15 March 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

வங்கதேசத்தினர் ஒரு லட்சம் பேர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை கர்நாடக அரசு வழங்கியுள்ளதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

பெங்களூரு,

வங்கதேசத்தினர் ஒரு லட்சம் பேர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை கர்நாடக அரசு வழங்கியுள்ளதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை

கர்நாடக பா.ஜனதா சார்பில் பெங்களூருவை பாதுகாப்போம் என்ற பெயரில் பெங்களூருவில் தொகுதி வாரியாக பாதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று புலிகேசிநகர் தொகுதியில் இந்த பாதயாத்திரை நடைபெற்றது. இதில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.அசோக் கலந்துகொண்டு பேசியதாவது:-

முதல்-மந்திரி சித்தராமையா சமூகங்களை உடைக்க முயற்சி செய்கிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவுடிகள் போலீஸ் நிலையங்களை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள். இதனால் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் இல்லை என்ற நிலை இங்கு நிலவுகிறது. நகரில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

வங்கதேசத்தினருக்கு...

இதன் காரணமாக தான் பெங்களூருவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த அரசு பெங்களூருவில் தங்கியுள்ள வங்கதேசத்தினர் ஒரு லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையை இந்த அரசு வழங்கியுள்ளது. உண்மையான பெங்களூருவாசிகளுக்கு கடன் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கவில்லை. ஆனால் வங்கதேசத்தினருக்கு கடன் உள்பட எல்லா வசதிகளையும் இந்த காங்கிரஸ் அரசு செய்து கொடுக்கிறது.

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. பெங்களூருவை மட்டுமல்ல கர்நாடகத்தையும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் இந்த காங்கிரஸ் அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. சித்தராமையா மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. ஆனால் அவர் மீது ஊழல் தடுப்பு படை வழக்கு பதிவு செய்யவில்லை. கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு ஆர்.அசோக் பேசினார்.

Next Story