சேரம்பாடி அருகே பசுமாட்டை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி, கிராம மக்கள் அச்சம்


சேரம்பாடி அருகே பசுமாட்டை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி, கிராம மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 15 March 2018 3:45 AM IST (Updated: 15 March 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

சேரம்பாடி அருகே பசுமாட்டை, சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால், குறிஞ்சி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது பசுமாடு நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். ஆனால் மாலையில் பசுமாடு வீடு திரும்ப வில்லை. இதனால் பல இடங்களில் செல்வராஜ் மாட்டை தேடினார். அப்போது தேயிலை தோட்டத்துக்குள் சிறுத்தைப்புலி கடித்து பசு மாடு எலும்புகூடாக கிடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் கணேசன், வன காப்பாளர் ராபர்ட் வில்சன், காவலர் பொட்டுராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பசு மாட்டின் உடலை சிறுத்தைப்புலி தின்று விட்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து கால்நடை டாக்டர் பிரபு மாட்டின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

சிறுத்தைப்புலியின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, கோரஞ்சால்- குறிஞ்சி நகருக்கு இடையே சாலையோரம் அங்கன்வாடி மையம் உள்ளது. சிறுத்தைப்புலி அட்டகாசத்தால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்புவதற்கு அச்சமாக உள்ளது. எனவே அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். 

Next Story