டி.நரசிப்புரா சாலையில் சங்கிலித்தொடர் விபத்து: சிறுவன் உள்பட 4 பேர் பலி 35 பயணிகள் காயம்


டி.நரசிப்புரா சாலையில் சங்கிலித்தொடர் விபத்து: சிறுவன் உள்பட 4 பேர் பலி 35 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 15 March 2018 2:00 AM IST (Updated: 15 March 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

டி.நரசிப்புரா சாலையில் நடந்த சங்கிலித்தொடர் விபத்தில் சிறுவன் உள்பட 4 பேர் பலியானார்கள். 35 பயணிகள் காயம் அடைந்தனர்.

மைசூரு,

டி.நரசிப்புரா சாலையில் நடந்த சங்கிலித்தொடர் விபத்தில் சிறுவன் உள்பட 4 பேர் பலியானார்கள். 35 பயணிகள் காயம் அடைந்தனர்.

பஸ்கள் மோதல்

மைசூருவில் இருந்து கொள்ளேகாலுக்கு நேற்று காலையில் ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பஸ் மைசூரு மாவட்டம் வருணா கிராமம் அருகே டி.நரசிப்புரா சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே டி.நரசிப்புராவில் இருந்து மைசூரு நோக்கி வந்த மற்றொரு தனியார் பஸ், இந்த பஸ்சின் மீது மோதியது. இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக வந்த ஒரு கார் பஸ்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டது.

இதனால் கார் அப்பளம்போல் நொறுங்கியது. பஸ்களின் முன்பகுதி சேதம் அடைந்தன. சங்கிலித்தொடர்போல் நடந்த இந்த விபத்தில் 10 வயது சிறுவன் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். விபத்து நடந்ததும் கட்டுப்பாட்டை இழந்த ஒரு பஸ் கவிழ்ந்தது. இதனால் அந்த பஸ்சில் இருந்த 35 பயணிகள் காயம் அடைந்தனர்.

5 பேர் கவலைக்கிடம்

இந்த சம்பவம் குறித்து ஆலனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பெயர், விவரங்கள் தெரியவில்லை


விபத்தில் பலியானவர்களின் பெயர், விவரங்கள் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆலனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story