கண் நீர் அழுத்த நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி


கண் நீர் அழுத்த நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 15 March 2018 3:30 AM IST (Updated: 15 March 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

கண் நீர் அழுத்த நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கடலூர்,

உலக கண் நீர் அழுத்த நோய் தடுப்பு வாரத்தையொட்டி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கண் நீர் அழுத்த நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் தண்டபாணி தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்டவர்கள் கண் நீர் அழுத்த நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.

மஞ்சக்குப்பம் டவுன்ஹால் முன்பு இருந்து புறப்பட்ட இந்த பேரணி பாரதிசாலை, பீச்ரோடு சந்திப்பு வரை சென்று திரும்பி மீண்டும் அதே வழியாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தை சென்றடைந்தது. இதில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், முன்னாள் திட்ட மேலாளர் டாக்டர் ஞானஸ்கந்தன் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதே போல் உலக கண் நீர் அழுத்த நோய் தடுப்பு வாரத்தையொட்டி கண் நீர் அழுத்த பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கலா கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர் அசோக்பாஸ்கர், டாக்டர் குமுதவல்லி ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் கண் நீர் அழுத்த பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஹபீசா மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

உலக கண் நீர் அழுத்த வாரத்தையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண் நீர் அழுத்த பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 8 பேரில் ஒருவருக்கு கண் நீர் அழுத்தம் வர வாய்ப்புகள் உள்ளது.

கண் நீர் அழுத்த நோய் என்பது கண்ணில் நீர் அழுத்தம் அதிகமாவதால் அல்லது சில நேரங்களில் சரியாக இருந்தாலும் கூட அது பார்வை நரம்பை படிப்படியாக பாதித்து கண்பார்வை இழப்பை ஏற்படுத்தும். எந்தவித முன் அறிகுறிகளும் தென்படாமல் இந்த நோய் நம் பார்வை முழுவதையும் பாதித்துவிடும். 40 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் கண்நீர் அழுத்த நோய் வரலாம். வலியுடன் கூடிய சிவந்த கண்கள், பொறுக்க முடியாத கண்வலி, விளக்குகளை சுற்றி வானவில் போன்று வண்ண வளையங்கள் தென்படுவது, மங்கலான கண்பார்வை, குறுகிய மையப் பார்வை, இரவில் பார்வை தடுமாற்றம் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.

எனவே 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழு கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண்ணில் அடிபட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக முழு கண் பரிசோதனை மற்றும் கண்ணில் நீர் அழுத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கண்புரை முற்றிப்போவதாலும், புரை வெடித்து புரையிலிருந்து வெளியேறும் புரத துகள்கள் கண்ணுக்குள் நீர் வெளியேறும் பாதையில் அடைத்துக்கொள்வதாலும் கண்ணில் நீர் அழுத்தநோய் வர வாய்ப்பு உள்ளது. எனவே கண் புரை அறுவை சிகிச்சையை சரியான நேரத்தில் செய்து கொண்டால் இந்த நோயில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story