தூத்துக்குடியில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு


தூத்துக்குடியில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 March 2018 2:45 AM IST (Updated: 15 March 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முத்துநகர் எக்ஸ்பிரஸ்

தூத்துக்குடியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் ரெயில் நிலையத்துக்குள் ரெயில்கள் வர முடியாத நிலை உருவானது. ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆர்.எம்.எஸ். தபால் நிலையம், ரெயில்வே போலீஸ் நிலையம் ஆகியற்றையும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ரெயில் தண்டவாளத்தில் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடிக்கு புறப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7.10 மணிக்கு தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து கீழுர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் செல்ல முடியவில்லை. இதனால் அங்கு பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பின்னோக்கி சென்று மீளவிட்டானை சென்றடைந்தது. அங்கிருந்து ரெயில் பெட்டிகளை பராமரிப்பு செய்வதற்காக நெல்லை ரெயில் நிலையத்துக்கு சென்றது.

மைசூரு எக்ஸ்பிரஸ்

இதேபோன்று காலை 11¼ மணிக்கு வர வேண்டிய மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12¼ மணிக்கு தூத்துக்குடிக்கு வந்தது. நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு பாசஞ்சர் ரெயில் வழக்கம் போல் புறப்பட்டது. அந்த ரெயில் காலை 9.40 மணிக்கு தூத்துக்குடிக்கு வர வேண்டும். ஆனால் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் 3 மணி நேரம் தாமதமாக மதியம் 12.45 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்தடைந்தது.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் குருவாயூர் இணைப்பு ரெயில் காலை 7.50 மணிக்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக 9.40 மணிக்கு புறப்பட்டு சென்றது. மழையால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

Next Story