குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 15 March 2018 4:15 AM IST (Updated: 15 March 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு, அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ளது பொம்மசமுத்திரம் ஊராட்சி. இங்கு கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் பிரச்சினை காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து பொம்ம சமுத்திரம் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து குடிநீர் வினியோகம் செய்யும் ஆபரேட்டரை சந்தித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஊராட்சி செயலாளர் அனுமதி கொடுத்தால்தான் தண்ணீர் வினியோகம் செய்ய முடியும் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொம்மசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி செயலாளர் சிவக்குமாரை மாற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கொல்லிமலை தாலுகா அலுவலகத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற தாசில்தார் பச்சமுத்து அவ்வழியே காரில் வந்தார்.

இதைப் பார்த்த பொதுமக்கள், அவருடைய வாகனத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் தாசில்தார் பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், இளங்கோவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் செல்வராஜ், சேந்தமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் ஊராட்சி செயலாளரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு எழுதி அதனை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசிடம் பொதுமக்கள் வழங்கினர்.

அதை பெற்றுக்கொண்ட சிவபிரகாசம், ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அந்த மனுவில், கையெழுத்திட்டார். அந்த மனுவை ஊராட்சி மன்ற அலுவலக சுவரில் பொதுமக்கள் ஒட்டினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story