இணைப்புகளை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி போராட்டம்


இணைப்புகளை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி போராட்டம்
x
தினத்தந்தி 15 March 2018 4:45 AM IST (Updated: 15 March 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

கேபிள் டி.வி. வரி பாக்கியை செலுத்தாத இணைப்புகளை அதிகாரிகள் துண்டிக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கனூர்,

புதுவை மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 40 கிராமங்களில் 44 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உள்ளனர். இவர்கள் கேபிள் டி.வி. சந்தாதாரர்களிடம் வசூலிக்கும் தொகையில் 10 சதவீதத்தை கொம்யூன் பஞ்சாயத்துக்கு கேளிக்கை வரியாக செலுத்தவேண்டும். ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு வரை சுமார் ரூ.10 லட்சமும், 2017-ம் ஆண்டு ரூ.7 லட்சம் என மொத்தம் ரூ.17 லட்சத்தை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வரி செலுத்தாமல் உள்ளனர்.

இந்த வரி பாக்கியை செலுத்தாததால் கேபிள் டி.வி. இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று கடந்த ஆண்டு கொம்யூன் பஞ்சாயத்து எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 4 தவணைகளில் வரி பாக்கியை செலுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் சில ஆபரேட்டர்கள் முழுமையாகவும், பலர் பகுதியாகவும் வரியை செலுத்தவில்லை.

இந்த நிலையில் அண்மையில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீதாராமன், கேபிள் டி.வி. நிலுவை தொகை செலுத்தாவிட்டால் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி இணைப்புகளை துண்டிக்க நேற்று காலை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீதாராமன் மற்றும் அதிகாரிகள் காட்டேரிக்குப்பத்தில் உள்ள ஆபரேட்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.

இதை அறிந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அங்கு வந்தனர். அவர்கள் இணைப்புகளை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை மிரட்டும் வகையில் கேன்களில் வைத்திருந்த மண்எண்ணெயை தங்களது உடலில் ஊற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காட்டேரிக்குப்பம்- வழுதாவூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இதன்பின்னர் காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் கேபிள் டி.வி.ஆபரேட்டர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

2016-ம் ஆண்டு கேபிள் டி.வி. கணக்கின்படி கேளிக்கை வரி வசூலிக்கவேண்டும். ஆனால் 2017-ம் ஆண்டு கேபிள் டி.வி. இணைப்பு எண்ணிக்கை அதிகமாக காட்டப்பட்டு உள்ளது. இதை ஏற்க முடியாது. வரி பாக்கியை செலுத்த ஒருமாத காலஅவகாசம் தரவேண்டும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து 2016-ம் ஆண்டுக்கான வரி பாக்கியை ஒரு மாதத்துக்குள் செலுத்த கெடு விடுத்த அதிகாரிகள், வரியை கட்டத்தவறினால் இணைப்புகள் கட்டாயம் துண்டிக்கப்படும் என்றனர்.

கேபிள் டி.வி. இணைப்புகளை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் காட்டேரிக்குப்பத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story