தாராவியில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை- பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


தாராவியில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை- பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 March 2018 4:30 AM IST (Updated: 15 March 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில், பட்டப்பகலில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

தாராவியில், பட்டப்பகலில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வீடுகளில் திருட்டு

மும்பை தாராவி பஸ்வேஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திர ஷிண்டே. இவரது மனைவி மனிஷா. நேற்றுமுன்தினம் காலை ராஜேந்திர ஷிண்டேவும், அவரது மகனும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். மதியம் மனிஷா அருகில் உள்ள மைதானத்தில் அப்பளம் செய்து காய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அந்த நேரத்தில் திருட்டு ஆசாமிகள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை திறந்து அதில் இருந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த சிலைகளை திருடிச்சென்று உள்ளனர்.

மாலை வீட்டுக்கு வந்த மனிஷா வீட்டில் கொள்ளை நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்தநிலையில், அருகில் உள்ள ரஞ்சனா கட்கே என்பவரது வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருந்தது தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர்.

அடுத்தடுத்த வீடுகளில்...


அந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ள தாராவி ஹனுமான் சவுக் பகுதியில் தீபக் நாராயண்கர் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து பார்த்து உள்ளனர்.

ஆனால் அங்கு நகை ஏதும் கிடைக்காததால் வீட்டில் இருந்த ஒரு செல்போனை மட்டும் எடுத்து கொண்டு சென்றுவிட்டனர்.

பின்னர் அவரது வீட்டின் எதிரில் வசித்து வரும் மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த திருட்டு ஆசாமிகள் அங்கிருந்த ரூ.2 ஆயிரத்தை திருடிச்சென்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டு சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த 4 குடும்பத்தினரும் சம்பவம் குறித்து தாராவி போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீஸ் விசாரணை

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஒரே கும்பலை சேர்ந்த ஆசாமிகள் தான் இந்த கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியிருக்கலாம் எனவும், 4 சம்பவங்களும் மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

ஒரே நேரத்தில் 4 வீடுகளில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் தாராவி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Next Story