ஜோதிடத்தில் மருத்துவம் : நட்சத்திரம் தரக்கூடிய நோய்கள்


ஜோதிடத்தில் மருத்துவம் : நட்சத்திரம்  தரக்கூடிய நோய்கள்
x
தினத்தந்தி 16 March 2018 9:30 AM IST (Updated: 15 March 2018 3:02 PM IST)
t-max-icont-min-icon

வானத்தில் உள்ள அண்டவெளியில் லட்சக் கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும், நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

27 நட்சத்திரங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதன் குணங்களும் தன்மையும் வேறுபாடுகள் கொண்டவை. இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் சூரியனையோ அல்லது பூமியையோ சுற்றுவதில்லை. தன்னுடைய நிலைப்பாட்டில் நிலைத்து நிற்பவை. ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதம். அதன்படி 27 நட்சத்திரங்களுக்கு மொத்தம் 108 பாதங்கள்.

மொத்தம் 12 ராசிக்கு 108 பாதங் கள் கொண்டு இருந்தாலும், எந்த ஒரு கிரக சஞ்சாரம் இருந்தாலும் இந்த நட்சத்திர பாதத்தில் தான் பயணம் மேற்கொள்கிறது. இந்த நட்சத்திர பாத பயணத்தில் தான், கிரகங்களின் குணங்கள் மாறி ஜாதக பலனை நமக்கு தருகிறது. மேலும் நட்சத்திர பாதம் அடிப்படையில் தான் கோச்சார கிரக சஞ்சார பலன் கள், குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு–கேது பெயர்ச்சி பலன்கள் சொல்லப்படுகிறது.

இன்றைய கிரக சஞ்சாரம் மற்றும் கிரகங்கள் எந்தெந்த நட்சத்திரத்தில் அமர்ந்து உள்ளதோ அதற்கு ஏற்றவாறு தான் ஒவ்வொரு ராசிகளுக்கும் தினபலன், வாரபலன், மாதபலன்கள், கிரகப் பெயர்ச்சி பலன்கள் கூறப்படுகிறது. ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங் களையும் ஒவ்வொரு கிரகம் ஆதிக்கம் செய்கிறது.

சூரியன்     – கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

சந்திரன்     – ரோகிணி, அஸ்தம், திருவோணம்

செவ்வாய்     – மிருகசீரி‌ஷம், சித்திரை, அவிட்டம்

புதன்     – ஆயில்யம், கேட்டை, ரேவதி

குரு     – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

சுக்ரன்     – பரணி, பூரம், பூராடம்

சனி     – பூசம், அனு‌ஷம், உத்திரட்டாதி

ராகு     – திருவாதிரை, சுவாதி, சதயம்

கேது     – அஸ்வினி, மகம், மூலம்

27 நட்சத்திரங்களை 9 கிரகங்கள் ஆதிக்கம் செய்கிறது. ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்து உள்ளாரோ அந்த கிரகத்தின் திசையே முதலில் தொடங்கும். இந்த 27 நட்சத்திரங்கள், ராசி மண்டலத்தில் உள்ள அமைப்பு, அதன் பாகை, கலை போன்றவற்றை ஒரு அட்டவணை மூலம் அறியலாம். அந்த அட்டவணைபடியே கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன. இந்த நட்சத்திர அமைப்புகள் மூலம் தான் ஒரு மனிதனின் உடலில் நோய்கள் தோன்றுகின்றன. நட்சத்திரங்கள் தரும் நோய்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். நாம் பார்க்கப் போவது பொது பலன்களே தவிர, இந்த நோய்கள் கட்டாயமாக வரும் என்று கூற முடியாது.

அஸ்வினி

நட்சத்திரத்தில் முதலாவது நட்சத்திரமாக இருந்தாலும், வானத்தில் இந்த அஸ்வினி ஆறு நட்சத்திரங் களின் கூட்டமாகும். இது வானத்தில் குதிரை முகம் போல் தோற்றமளிக்கும். தேவ கணம் கொண்டு இருந்தாலும், வலது பக்கமாக இருக்கக் கூடியவை. சம நோக்கு பார்வை இருந்தாலும் இதன் அதிபதி கேதுவாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தலைவலி, கால் மூட்டு வலி, இதய நோய், சளி இருமல், ரத்த கொதிப்பு, மூச்சு இரைப்பு, பருவ கால நோய்கள் வரக்கூடும்

பரணி

இரண்டாவது நட்சத்திரமாக பரணி இருந்தாலும், இது மூன்று நட்சத்திரங்களின் கூட்டமாகும். வானத்தில் முக்கோண வடிவத்தில் தோன்றும் இது, மனித கணம் கொண்டவை. வலது பக்கமாக இருக்கக் கூடியவை. கீழ் நோக்கும் பார்வை கொண்டு இருந்தாலும், இதன் அதிபதி சுக்ரன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, பல் வலி, கால் வலி, பாத வெடிப்புகள், கண் நோய், அஜீரண கோளாறு, தோல் அரிப்பு, உடல் உஷ்ணம் போன்ற நோய்கள் வரலாம்.

கார்த்திகை

இந்த நட்சத்திரமானது, ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாகும். வானத்தில் கத்தி போன்று தோற்றம் தரக்கூடியது. இது ராட்சத கணம் கொண்டவை. வலது பக்கமாக இருந்தாலும் கீழ் நோக்கும் பார்வை கொண்டவை. இதன் அதிபதி சூரியன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாய் புண், மலச்சிக்கல், சளி தொல்லை, பித்தம், உடல் உஷ்ணம், தலைவலி, நரம்பு பிரச்சினைகள் வந்து போகும்.

ரோகிணி

இவை ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமாகும். வான்வெளியில் வண்டி போல் தோற்றம் தரக்கூடியவை. மனித கணம் கொண்டு இருந்தாலும், இடது பக்கம் உள்ளவை. மேல் நோக்கும் பார்வை தன்மை கொண்டுள்ள இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, மூல நோய், வாயு தொல்லை, மூச்சுப் பிரச்சினை, இதயக் கோளாறு, கண் பார்வை கோளாறு, பல் ஈறுகள் பிரச்சினை, மன அழுத்தம் போன்றவை இருக்கக்கூடும்.

மிருகசீரி‌ஷம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட இந்த நட்சத்திரம், தேவ கணம் கொண்டவை. மூன்று நட்சத்திரங்களின் கூட்டு அமைப்பாகும். ஆகாயத்தில் மானின் தலை போன்ற தோற்றத்தில் காணப்படும். இடது பக்கமாக இருக்கும் இந்த நட்சத்திரம் சமநோக்கு பார்வை கொண்டவை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, ரத்தம் குறைவு, கை கால்கள் சோர்வு, நெஞ்சு வலி, கண் நோய், தூக்கம் இன்மை, வயிற்று வலி, பால்வினை நோய் போன்றவை வரக்கூடும்.

திருவாதிரை

வான்வெளியில் ஒரே நட்சத்திரம் கொண்டவை. தளிர் போன்ற வடிவம் கொண்ட இந்த நட்சத்திரம், மனித கணம் கொண்டவை. இடது பக்கமாக இருந்தாலும் மேல் நோக்கு தன்மை கொண்டவை. இதன் அதிபதி ராகு. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு, நெஞ்சுவலி, வயிற்று வலி, தோல் அரிப்பு, வாய் புண்கள், பித்தம், சிறுநீரக கல் அடைப்பு போன்றவை வரக்கூடும்.

புனர்பூசம்

குரு ஆதிக்கம் செய்யும் இந்த நட்சத்திரம், ஐந்து எண்ணிக்கைகளின் கூட்டமாகும். வானத்தில் குளம் போல் தோற்றம் தரக்கூடியது. தேவ குணம் கொண்டு இருந்தாலும், வலது பக்கம் இருந்து சமநோக்கு பார்வை செலுத்தக்கூடியது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, காது வலி, வயிற்றுக் கோளாறு, பல் ஈறுகள் பிரச்சினை, கண் பார்வை கோளாறு, ஜலதோ‌ஷம், வாயு தொல்லை, உடல் பருமன் போன்ற வியாதிகள் ஏற்படலாம்.

பூசம்

சனி ஆதிக்கம் செய்யும் இந்த நட்சத்திரம் மூன்று எண்ணிக்கை கொண்ட கூட்டு அமைப்பாகும். வானத்தில் அம்பு போல் தோற்றம் தரக்கூடியது. தேவ கணம் கொண்ட இந்த நட்சத்திரம் வலது பக்கமாக இருக்கும். மேல் நோக்கும் பார்வை கொண்ட, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, உடல் உஷ்ணம், பல் வலி, ரத்தம் குறைவு, இளம் நரை, மன அழுத்தம், மூட்டு வலி, அஜீரண கோளாறு போன்றவை தோன்றி மறையும்.

இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்க்கலாம்.

- ஆர்.சூரியநாராயணமூர்த்தி.

Next Story